ஞாயிறு, 14 ஜூலை, 2024

சுதர்ஷன விருத்தம்

 மலையெடுத்து மழைதடுத்த மாயவாயன் கையணி
        மதிமயக்கக் கதிர்மறைக்கு மாயமாக வாதினி
னிலையிழந்த வானைகாக்க நொடிவிரைந்து முதலையை
        நிலைகுலைத்த நாரணன்ற னிகரிலாத நேமியே
சிலைகுனித்த சீதைநாதன் சீர்த்திபேசும் பாணமாய்
      சினமெடுத்துத் தூண்பிறந்த சிங்கவேளி னுகிருமா
யலைகடைந்த மாயவன்றன் ரூபமான மூர்த்தியே
     யகமகிழ்ந்து வாழ்வுவீடு மளியளிப்பா யன்பர்க்கே

எண்சீர் ஆசிரிய விருத்தம் 

 சீர் பிரித்து

மலை எடுத்து மழை தடுத்த மாய ஆயன் கை அணி
மதி மயக்க கதிர் மறைக்கும் மாயம் ஆக வாதினில்
நிலை இழந்த ஆனை காக்க நொடி விரைந்து முதலையை
நிலை குலைத்த நாரணன் தன் நிகர் இல்லாத நேமியே
சிலை குனித்த சீதை நாதன் சீர்த்தி பேசும் பாணம் ஆய்
சினம் எடுத்து தூண் பிறந்த சிங்க வேளின் உகிரும் ஆய்
அலை கடைந்த மாயவன் தன் ரூபமான மூர்த்தியே
அகம் மகிழ்ந்து வாழ்வு(ம்) வீடும் அளி அளிப்பாய் அன்பர்க்கே  

 

பொருள் 

கோவர்தன மலையை எடுத்து மழையிடமிருந்து தன் மக்களைக் காத்த மாய ஆயன் கண்ணனுக்குக் கையின் அணியாக விளங்கும், மதி மயங்கும் படியாக சூரியனை மாயமாக மாபாரதப் போரினில்  மறைத்த , தன் நிலையை இழந்து உயிர் காக்கும் படி வேண்டிய கஜேந்திரனைக் காக்க நொடியில் விரைந்து வந்து முதலையைக் குலைத்த திருமாலின் நிகரிலாத சக்கரமே! வில்லை வளைத்த சீதை நாதனான இராமனது கீர்த்தியைப் பேசும் படி விளங்கும் அவரது கணையாக விளங்குபவரே, மிகுந்த கோவத்தால் தூணிலிருந்து பிறந்து இரணியனை அழித்த நரசிம்மரின் நகமாய் விளங்குபவரே , கடல் கடைந்த மாதவன் தன் ரூபமாகவே விளங்குபவரே , அகம் மகிழ்ந்து , இகமும் பரமும் ( வாழ்வும் வீடும் ) அடியவர்க்கு  அருள் புரிவாய்   

 

 

படம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி