புதன், 28 ஜனவரி, 2026

என்னை மறந்த விருத்தம்

 என்னை மறந்த நிலைவரினும்

     யாவு மிழந்த நிலைவரினும்

நின்னை மறந்த நிலைவருமோ

    நீத மறந்து மதைவிழையேன்           ஒருநாளும் 


பொன்னை யடைந்த திருடனெனப்

   பூரிப் படைந்து நினதடியைப்

போற்றி நினைந்து மனமகிழப்

    பொய்யை விடுத்து நினதருளால்      புகலேனோ


பின்னை மணந்த வடிவழகன்

    போரூ டுரைத்த வறிவொருவன் 

கன்னங் கறுத்த முகிலனயன்

     குன்றை யெடுத்த விரலழகன்             மருகோனே 


அன்னை அணைத்த அறுமுகவ 

     ஆரூ ரமர்ந்த அரசர்குரு

அஞ்சல் அழித்த அசுரநம

    கொஞ்சு குறத்தி மனமகிழு                  பெருமாளே 


செவ்வாய், 27 ஜனவரி, 2026

மேலை நாடு விருத்தம்

 மேலைநாடு சென்றபோதும் வேல்விடுத்த தேவனைக்

காலைமாலை யுள்ளமெண்ணு காதன்மாற லாகுமோ
ஆலவாயன் காதுசொன்ன வாதியான மந்திரம்
ஞாலம்யாவும் வந்துதிக்க ஞானமீனு வேலனே

சனி, 24 ஜனவரி, 2026

கல்யாண சுப்பிரமணியர் விருத்தம் (Beverewijk)

மருளகத் தலைந்த சிறியேனை

     மதிசமைத் துயர்ந்த வுனதாளைப்

பொருளெனத் துணிந்து புகழ்பாட 

     வொருதமிழ்த் திறத்தை யருளாயே

திருமணத் தணைந்த விருமாத

    ரிருபுறத் தணைந்த வொருகோலப்

பொருசெயித் துவந்த புகழ்வேலா

     பெவரெவிக் கமர்ந்த பெருமாளே


செவ்வாய், 20 ஜனவரி, 2026

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும் 

பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும்

பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம்

பழுதே துதியாத் திதி 


ஞாயிறு, 18 ஜனவரி, 2026

செவ்வாய், 13 ஜனவரி, 2026

அளவில் அழகின் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 அளவி லழகின் மறுபேர் முருகன் 

றொளைவேன் மலைமா துகள்செ யொருவன்

வளைவில் லிராமன் வழுத்து மருகன் 

விளைப்பான் விதிக்கும் விதி 


மாவாய் ஆசிரியப்பா

மாவாய் பிளந்த மூவா முகுந்தனை 

யேவா நகைத்து முப்புர மெரித்தா 

னஞ்சடர் மிடற்றமு தாக்கு நங்கை

பஞ்சுக் கரமணை பாங்குசெய் வேலன் 

களவிற் குறத்தி கைத்தலம் பற்றக் 

களிற்றுரு வெடுத்த வெள்ளெயிற் றொருவ

னளவற்ற வாற்றலைச் செப்ப 

வான்றோர் மொழியி னகலமுந் துகளே 


செவ்வாய், 6 ஜனவரி, 2026

பரங்குன்ற செவ்வாயிற் செவ்வேள் வெண்பா

 பரங்குன்ற நீயே பரம்பொருளே வேளே

மரமொன்றிற் றீப மலர - வரந்தந்து
காத்தாய் வடிவேலா கார்மயில் வாகனா
வேத்தவுனை யேற்றதின மின்று

திங்கள், 5 ஜனவரி, 2026

மார்கழி -14

நாவுடையார் நின்றேத்து நாயகனை யென்றென்றுஞ்

சாவறியா ருள்ளுள்ளுஞ் சர்ப்ப சயனனை 

மாவலிபால் யாசித்த மாணியை மாவடிவை 

யாவர்க்கு மாதியை யாண்டுமுறை மூலத்தை 

நோவறியா  நுங்கட்கு வீடளித் தாள்வானைப்  

பாவடிவிற் பாங்குரைத்த பல்லுயுரு முய்யவவன் 

சேவடிசேர் சீர்வழியைச் செப்பலுற்ற கோதைபுகழ்

நாவளர நாட்டு நயந்தேலோ ரெம்பாவாய்


ஞாயிறு, 4 ஜனவரி, 2026

வேதாந்தம் வெண்பா

 வேதாந்தம் பேசி வினையொழிப்பீ ரஃதென்றுந் 

தூதாண்ட விட்டுணுவைத் தூமலரா - ணாதனை

வில்விசயன் சாரதியை வையத் துசாவெனவே 

சொல்லிசைத் தேத்தலொப்போ சொல்


வெள்ளி, 2 ஜனவரி, 2026

மார்கழி- 13

புள்ளின் முகமுடைத்தான் புள்ளின் கொடியுடைத்தான் 

புள்ளி வடிவெடுத்துப் புங்க மறையுரைத்தான் 

புள்ளி னிறுதிவினை போற்றிச் சுயம்புரிந்தான் 

புள்ளின் விழியறுத்தான் பூட்டு சகடுதைத்தான் 

வள்ளற் குணமுடைத்தான் வாழ்த்தித் தமிழ்மாலை

துள்ளு மிசைவடிவிற் றுங்க புதுவைமகள்

உள்ளத் துயர்வெண்ணி யூட்டு திருவருளை 

யள்ளி யருந்து விழைந்தேலோ ரெம்பாவாய்   

நாதவிந்து விருத்தம்

 நாதவிந்து ஞானரூப நாகவெற்ப பாரதச்

சூதுவென்ற துட்டர்நூறத் தேர்நடத்து மாதவன்

மாதுபெற்ற மான்மணக்க கிழவனான குமரநின்

பாதமுற்ற வேடுகற்க வெத்தவத்தை யாள்வதே 


மலையுயர்த்தி விருத்தம்

மலையுயர்த்தி மழைதடுத்த மாயவாய னுறுதியும்

சிலைவளைத்துக் கரம்பிடித்த சீதைகேள்வ னுறுதியும்

தொலைநிலத்தை நிலைநிறுத்து சூகரன்ற னுறுதியும்

நிலைநிறுத்தி நினைவகற்ற நித்தமுத்தி சித்தியே 


வியாழன், 1 ஜனவரி, 2026

மயங்கிநின்று விருத்தம் (பிரயோகச் சக்கரம்)

 மயங்கிநின்று வாழ்வினின் மனந்துவண்டு போகலாம்

தயங்கிநின்று நாதனை மறந்துகூட போகலாம்

பயங்கொளாது பத்தனின் பதைப்பிரிந்து மீளவே

இயங்குசக்க ரத்தினான் இமைத்திடாது காப்பனே

மார்கழி-12

 ஆணவத்தை விட்டொழித்த வானைதனைக் காத்தானைத் 

தூணுதித்துத் தூய சிறுவனைக் காத்தானைக் 

காணவந்த நட்பவலைக் கண்ணமுதாய்க் கொண்டானை 

மாணியாக வந்துலகின் மூன்று மளந்தானை 

நாணொழிந்து நம்பிவந்த ஆயர்த நாயகனைப்  

பூணொழிந்து நோன்புற்ற பூமாலை சூடியிவள் 

வாணிமகிழ் தேனோசை வஞ்சி தமிழ்ப்பாவை

தோணியென பற்றிச் சுகித்தேலோ ரெம்பாவாய்


உரங்கமீது பள்ளி எழு சீர் விருத்தம்

உரங்கமீது பள்ளிகொண் டுறங்குமாதி தேவநின் றரங்கம்வீசு மோதிமேற் றிரங்களாளு பாங்கினை  யிரங்குமன்பின் வண்ணமா யிறங்கிவந்து பூதலத் தரங்கமாளு நீர்மை...