மண்ணாளு மன்னற் கடிபணித னன்முறையோ
பண்ணாளும் பைந்தமிழ ரேற்பாரோ - பெண்ணாளும்
பாகத்தான் பைந்நாகத் தாழ்சடையான் றாளொன்றே
தாகத்தார் சாற்றும் பணிவு
மண் ஆளும் மன்னன் கு அடிபணிதல் நல் முறையோ
பண் ஆளும் பைந் தமிழ்ர் ஏற்பாரோ பெண் ஆளும்
பாகத்தான் பை நாக தாழ் சடையான் தாள் ஒன்றே
தாகத்தார் சாற்றும் பணிவு
மண் ஆளும் மன்னற்கு அடிபணிதல் நன்முறையோ- மண் ஆளும் மன்னர் என மிகையாகக் கூறி இஃது செங்கோல் மன்னரை விலக்கிக் கொடுங்கோன் மன்னரையே குறிக்கும்படி அமைந்தது அதாவது அம்மன்னர் மண்ணை மட்டுமே ஆள்கிறார் மக்கட்கு நன்மை பயக்கவில்லை, இவ்வாறான மன்னருக்கு அடி பணிதல் நன் முறையா என்ன? இல்லை என்பதாம்
பண் ஆளும் பைந்தமிழர் ஏற்பாரோ - பண் ஆளும் சிறப்புடைய செம்மொழியான பசுந்தமிழர் இச்செயலை ஏற்பார்களா? இல்லை என்பதாம்
பெண் ஆளும் பாகத்தான் - பெண்ணைத் தன் இடப்பாகத்தில் ஆள்பவனான
பை நாக தாழ் சடையான் - தனது தாழ்ந்த சடையினில் பைந்நாகத்தைப் புனைந்தவனான சிவபெருமான்
தாளொன்றே தாகத்தார் சாற்றும் பணிவு - திருவடி ஒன்றே மெய்யின் கண் தாகம் உடையார் சாற்றும் பணிவாகும்!
கொடுங்கோன்மை அரசர்க்குப் பணிவது நல்ல முறையன்று, இதை செம்மை உடைய இசை வடிவம் உருவாக்கிய பைந்தமிழர் ஏற்க மாட்டார், பெண்ணை ஒரு பாகத்தே ஆளும், பைந்நாகத்தைத் தன் தாழ்ந்த சடையில் புனைந்தவனான இறைவன் சிவ பெருமான தாள்களை மட்டுமே மெய்யின் கண் தாகம்/தேடல் உடையார் பணிவார்கள் என்றவாறு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக