இரு மாதர் இத்திருவைக் காண்கிறார்கள் அதன் தாக்கமாக தமக்கிடையே இது இராமர் தான் என்று தனது கருத்தை முன்வைக்கின்றார் முதற்பெண், இரண்டாம் பெண் இது முருகர் என்று தமது கருத்தை முன்வைக்குமாறு அமைந்த சாழல் பாடல்கள் பின்வருமாறு
1.
வில்லேந்து மழகைப்பார் வியன்சிரிப்பின் றாக்கம்பா
ரெல்லாளுங் குலராம னிவனன்றோ சொல்லேடீ
வில்லேந்து மழுகுடனே வேலேந்து மெளிமைபார்
கல்லால னனன்மைந்தன் கண்டுவப்பாய் சாழலோ
சீர் பிரித்து
1.வில் ஏந்தும் அழகைப் பார் வியன் சிரிப்பிப் தாக்கம் பார்
எல் ஆளும் குல ராமன் இவன் அன்றோ சொல்லே டீ
வில் ஏந்தும் அழகு உடையான் வேல் ஏந்தும் எளிமை பார்
கல் ஆலன் அனல் மைந்தன் கண்டு உவப்பாய் சாழலோ
2. சொல்லொன்றே செப்புடையான் வில்லெய்துஞ் சீரம்பு
மில்லாளு மஃதேதா னிதுராமன் றானேடீ
யுல்லாச மயிலுடையா னுயர்சேவற் கொடியுடையான்
சல்லாப முருகனிவ னையமில்லை சாழலோ
சீர் பிரித்து
சொல் ஒன்றே செப்பு உடையான் வில் எய்தும் சீர் அம்பும்
இல்லாளும் அஃதேதான் இது ராமன் தானே டீ
உல்லாச மயில் உடையான் உயர் சேவல் கொடி உடையான்
சல்லாப முருகன் இவன் ஐயமில்லை சாழலோ
3.
கோதண்டங் குமிண்சிரிப்புக் குறைவில்லா நளினவுரு
மாதொன்றே சிந்திக்குஞ் சீதைக்கை காணேடீ
வாதென்றான் மிகவிரும்பும் வள்ளிமண வாளனிவன்
வேதனையுஞ் சிறைபிடித்த வேலனிவன் சாழலோ
சீர் பிரித்து
கோதண்டம் குமிண் சிரிப்பு குறைவு இல்லா நளின உரு
மாது ஒன்றே சிந்திக்கும் சீதைக்கு ஐ காணே டீ
வாது என்றால் மிக விரும்பும் வள்ளி மணவாளன் இவன்
வேதனையும் சிறை பிடிக்கும் வேலன் இவன் சாழலோ
4.
பாரண்டம் பலவுலகும் படுத்திய தசக்கிரீவற்
சாரங்க மெடுத்தழித்த தாசரதி காணேடீ
போரொன்றிற் புன்னகைத்துப் புனிதவளின் வேலெடுத்துச்
சூரண்டம் வேரறுத்த சிறுமுருகன் சாழலோ
சீர் பிரித்து
பார் அண்டம் பல உலகும் படுத்திய தசக் கிரீவன்
சாரங்கம் எடுத்து அழித்த தாசரதி காணே டீ
போர் ஒன்றில் புன்னகைத்து புனிதவளின் வேல் எடுத்து
சூர் அண்டம் வேர் அறுத்த சிறு முருகன் சாழலோ
5.
காடாறு திரிந்துவந்தான் கனியமுது செய்துணிந்தான்
கேடான கொடியவரைக் கொன்றரகு நாதனடீ
வீடாறு படையுடையான் வேதமுதற் பொருளுரைத்தான்
சூடான பழமளித்த சுட்டியிவன் சாழலோ
சீர் பிரித்து
காடு ஆறு திரிந்து உவந்தான் கனி அமுது செய் துணிந்தான்
கேடான கொடியவரைக் கொன்ற ரகு நாதனடீ
வீடாறு படை உடையான் வேத முதல் பொருள் உரைத்தான்
சூடான பழம் அளித்த சுட்டி இவன் சாழலோ
6.
புல்லுருவி யத்திரமாய்ப் புன்காகங் கண்ணறுத்தான்
கல்லொருவள் பெண்ணாக்குங் காகுத்தன் காணேடீ
வல்லசுரன் கொடிமயிலாய் மாற்றியருள் புரிந்தவனாம்
பல்வரிசை அழகுடையாள் பங்கனிவன் சாழலோ
சீர் பிரித்து
புல் உருவி அஸ்திரமாய் புன் காகம் கண் அறுத்தான்
கல் ஒருவள் பெண்ணக்கும் காகுத்தன் காணே டீ
வல் அசுரன் கொடி மயிலாய் மாற்றி அருள் புரிந்தவனாம்
பல் வரிசை அழகுடையாள் பங்கன் இவன் சாழலோ
7.
வேடனொரு தம்பியென வீடணொரு தம்பியென
நாடையொரு தம்பியிடந் தந்தரகு நாதனடீ
யாடமர்ந்த வொருகோல மானையம ரொருகோல
மாடுமயில் வாகனனா யொருகோலஞ் சாழலோ
சீர் பிரித்து
வேடன் ஒரு தம்பி என வீடண(ன்) ஒரு தம்பி என
நாடை ஒரு தம்பி இடம் தந்த ரகு நாதன் அடீ
ஆடு அமர்ந்த ஒரு கோலம் ஆனை அமர் ஒரு கோலம்
ஆடும் மயில் வாகனனாய் ஒரு கோலஞ் சாழலோ
8.
நதிசூடு மீசனிவ னாமசொல்லிக் கதியளிக்கும்
பதியென்ற காசியுண்டு பாரதிபன் காணேடீ
விதிவழியிற் றடம்புரண்டும் விடிவுறவே யாக்களுக்குக்
கதிதருமோர் திருநாமக் காங்கேயன் சாழலோ
சீர் பிரித்து
நதி சூடும் ஈசன் இவன் நாமம் சொல்லிக் கதி அளிக்கும்
பதி என்ற காசி உண்டு பார் அதிபன் காணேடீ
விதி வழியில் தடம் புரண்டும் விடிவு உறவே அக்களுக்குக்
கதி தரும் ஓர் திரு நாமக் காங்கேயன் சாழலோ
9.
கூனிமிர வம்பேய்துங் கோசலைதன் குலமைந்தன்
றேனமரு வடவூரின் றிருவழகன் காணேடீ
வானவரின் றுயர்தீர்த்த வடிவழகுச் செந்தூரன்
றேனமரு சோலைமலைத் திருவழகன் சாழலோ
சீர் பிரித்து
கூன் நிமிர அம்பு ஏய்தும் கோசலை தன் குல மைந்தன்
தேன் அமரு வடவூரின் திருவழகன் காணே டீ
வானவரின் துயர் தீர்த்த வடவழகுச் செந்தூரன்
தேன் அமரும் சோலை மலைத் திருவழகன் சாழலோ
10.
சிலைவளைத்து மணமுடித்த சீதைநா யகன்மாயக்
கலைதுறத்தித் தலையறுத்த கருநீலன் காணேடீ
யலையடங்க வேலெறிந்த கார்த்திகை மாதறுவர்
முலையடங்க பால்குடித்த முருகனிவன் சாழலோ
சீர் பிரித்து
சிலை வளைத்து மணம் முடித்த சீதை நாயகன் மாயக்
கலை துறத்தித் தலை அறுத்த கரு நீலன் காணே டீ
அலை அடங்க வேல் எறிந்த கார்த்திகை மாது அறுவர்
முலை அடங்க பால்குடித்த முருகன் இவன் சாழலோ
11
முருகுருவ மனையாளும் முனைவரிய விளங்கோவு
மருகிருக்கு மரியவனின் அவதாரங் காணேடீ
யரிமருக னணியழக னனவரத மருளளிக்கு
முருகனெனு முழுமதிநே ருமைபாலன் சாழலோ
சீர் பிரித்து
முருகு உருவ மனையாளும் முனைவு அரிய இளங்கோவும்
அருகு இருக்கும் அரி அவனின் அவதாரம் காணே டீ
அரி மருகன் அணி அழகன் அனவரதம் அருள் அளிக்கும்
முருகன் என்னும் முழுமதி நேர் உமை பாலன் சாழலோ
12.
மின்னாளு மிடையுடையாள் கண்ணாளு மணவாள
னெந்நாளுஞ் சரணர்க்கி வனிலக்குக் காணேடீ
செந்நாவி னருணகிரி திருப்புகழின் சந்தத்தாற்
பன்னாளும் பன்னிருகை பழநியப்பன் சாழலோ
சீர் பிரித்து
மின் ஆளும் இடை உடையாள் கண் ஆளும் மணவாளன்
எந் நாளும் சரணர்க்கு இவன் இலக்குக் காணே டீ
செந் நாவின் அருணகிரி திருப்புகழின் சந்தத்தால்
பன் ஆளும் பன்னிரு கை பழநி அப்பன் சாழலோ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக