ஞாயிறு, 8 பிப்ரவரி, 2026

ஆறுபடை வீட்டு வேற்காப்புக் குறள் வெண்பாக்கள்

 

சீரலைவாய் காத்த சிவசுதன்வேல் பேரலைவாய்

    பீடழியாக் காப்பாங் கடைக்கு




 

பேரலை வாய் ஆழிப் பேரலையின் ஊடாக

சீரலைவாய் பீடு – திருச்செந்தூர் என்னும் திருத்தலத்தின் பெருமை

அழியா காத்த சிவசுதன் வேல் – அழியாத படி காத்த சிவ பெருமானது மைந்தன் தன் வேல்

கடைக்கு காப்பு ஆம் – நமது வீடு பேறுக்கும் காப்பு ஆகும்

 

ஆழிப் பேரலையின் (Tsunami) ஊடாகச் சீரலைவாய் என்னும் திருத்தலத்தின் பெருமை குலையாத வாறு (2004 இல் வந்த ஆழிப் பேரலை கிழக்காசியா மற்றும் இந்தியக் கடலோர ஊர்களைப் பெரும் பாதிப்பிற்கு ஆளாக்கியது, ஆனால் திருச்செந்தூர் கோவில் இருந்த பகுதியில் மட்டும் சிறிதளவு பாதிப்புக் கூட இல்லை!) காத்த சிவ மைந்தன் தன் வேலாயுதம் நமது இறுதி இலக்கான வீடு பேற்றிற்கும் காப்பாய் அமையும்! 

 

 

பரங்குன்று பாடு புலவனுயிர் காத்த

கரங்குன்றாக் கந்தன்வேல் காப்பு

 

பரங்குன்று பாடு புலவன் – திருப்பரங்குன்றம் என்னும் திருத்தலத்தின் பாடு புலவனான நக்கீர நாயனார்

உயிர் காத்த – குகையில் நக்கீரர் உட்பட 1000 பேரை உண்வதற்காக அடைத்து வைத்த பூதத்தின் பிடியில் இருந்து அவர்கள் உயிரைக் காத்த

 

கரங்குன்றா கந்தன் வேல் காப்பு – கந்தக் கடவுளின் கையினிருந்து என்றும் விலகாத வேல் நமக்குக் காப்பாக அமையும்

 

திருப்பரங்குன்றத்தில் பாடு புலவனான நக்கீர நாயனாரின் உயிரை வரைக் குகையைத் தகர்த்துப் பூதத்தின் பிடியில் இருந்து காத்த கந்தப் பெருமானின் கையினின்று என்றும் விழாத வேல் நமக்குக் காப்பு ஆகும்     

 

திருவா வினன்குடிச் சேந்தன் மருவா

வனப்பளி வேலென்றுங் காப்பு

 

திருவாவினன்குடி சேந்தன் – திருவாவினன்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் சேந்தனை (முருகப் பெருமானை)

மருவு ஆ வனப்பு அளி – பொருந்தும் உயிர்களுக்கு அழகு அளிக்கும்

வேல் என்றும் காப்பு – வேல் என்றும் காப்பாம் நமக்கு

திருவாவினன்குடி (பழனியின் அடிவாரத்தில் அமைந்துள்ள படைவீடு) என்னும் திருத்தலத்தின் வீற்றிருக்கும் கந்தக் கடவுளைச் சேரும் அடியார்கட்கு அழகளிக்கும் வேல் என்றும் நமக்குக் காப்பாகும்  

 

ஏரகத் தாசா னிணைபிரியாப் பாரகத்துப்

பாழ்வினை போக்குவேல் காப்பு

 

பாரகத்து பாழ் வினை போக்கு  – இவ்வுலகின் வசிக்கும் உயிரினது அழிவைத் தரும் வினையைப் போக்க வல்ல

ஏரகத்து ஆசான் – திருவேரகம் (சுவாமி மலை) என்னும் தலத்தில் ஈசற்கும் குருவாக விளங்கும் முருகப்பெருமானை 

இணை பிரியா வேல் காப்பு   -  என்றுமே விட்டு விலகாத வேல் நமக்குக் காப்பு ஆகும்

 

பாரின் கண் வசிக்கும் உயிர்களின் பாழ் வினைகளைப் போக்க வல்ல சுவாமி மலையில் உறையும் ஈசற்கும் ஆசானாக விளங்கும முருகப் பெருமானை விட்டு விலகாத வேல் காப்பு ஆகும் நமக்கு

 

 

 

 

குன்று தொறாடுங் குகனெண்ணுங் கூற்றுடன்செய்

வென்றி விலகாவேல் காப்பு

குன்றுதொறு ஆடும் குகன் – அனைத்து மலைகளிலும் லீலைகள் புரியும் குகப் பெருமான்

எண்ணும் கூற்று உடன் செய் – எண்ணங்களை உடனடியாகச் செயல் படுத்தும்

வென்றி விலகா வேல் காப்பு – வெற்றியை என்றும் விலகாத வேல் காப்பாம் நமக்கு

 

குன்றுதொறாடும் குகன் எண்ணும் கூற்றுகளை உடனடியாக செய்து முடிக்கும் வெற்றியை விலகாத வேல் காப்பு ஆகும் நமக்கு

 

சோலைமலைத் தூயன் சுடர்வடிவு வேலைமலை

வீழ்த்தியநல் வேலுண்டே காப்பு

 

வேலை மலை வீழ்த்திய – கடலை வற்றச் செய்த, மலையாக நின்ற சூரனை வீழ்த்திய

 

சோலைமலை தூயன் – பழமுதிரச் சோலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் தூயனான முருகப் பெருமானது

 

சுடர் வடிவு நல் வேல் உண்டே காப்பு – சுடர் வடிவம்(அக்கினி சொரூபம்) கொண்ட மங்களகரமான வேல் உண்டே நமக்கு என்றும் காப்பு

 

கடலை வற்றச் செய்ததுமான, சூரனை மலையாக நின்ற போது சாய்த்ததுமான, பழமுதிர்ச்சோலை என்னும் திருத்தலத்தின் நாயகனான தூயவன் முருகப் பெருமான் தன் திருக்கை வேல் நமக்குத் துணையாக என்றும் உண்டே   

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மதிபணி மின்ன வெண்பா

 மதிபணி மின்ன மலர்நதி மின்ன விதிதலை யோடுவிரன் மின்ன - கதிதரு காசி கனலொடு மின்ன விரந்தனன ம் மாசை யகற்ற விறை