இம்மார்கழி திங்களில் ஒவ்வொருநாளும் ஒரு பாசுரம் படித்து அதன் பின்னர் தோன்றும் எண்ணங்களை வெண்பாக்களாக எழுதலாம் என்ற எண்ணம். அந்தாதித் தொடையில் அமையுமா என்று நாச்சியார் திருவருள் வேண்டி ஒரு சிறு தொடடக்கம்.
காப்பு
பாவை விரதத்தைப் பாவாய் வடித்திட
தேவை உனது திருவருள் - நாவை
கலைமகள் ஆண்டு கவிதை சிறக்க
மலைமகள் மைந்தனருள் வான்
1:-
மாதங்க ளிற்றனை மார்கழி என்றுரைத்தான்
கீதையில் அன்றொருநாள் கேசவன் - கோதையின்
பாவையை இத்திங்கள் பாடுவதே மீச்சிறந்த
சேவையாம் பார்த்தசார திக்கு
2:-
திக்கற் றிருக்குஞ் சிறுமிகள் உய்யவும்
வக்கற்றுப் பின்வரும் மாந்தர்க்கும் அக்கறையில்
வாடாச்சங் கத்தமிழ் மாலையா றைந்துமுன்
பாடாதோ உள்ளவரை பார்
( அன்று உன்னுடன் இருந்த பிற சிறுமியர்க்கும் , பின் தோன்றிய மனிதர்களுக்கும், அக்கறையில் நீ செய்த வாடாத சங்கத் தமிழ் மாலையான முப்பது பாசுரங்களே உய்யும் வழியாக உள்ளதால் , அதனைப் பாருள்ள வரை பாட மாட்டார்களோ)
3:-
பாரளந்த பாலனைப் பாடியே பாவையாள்
வேரகன்ற செல்வங்கள் வேண்டினாள் - நீர்வளமும்
பார்மிசை நின்றோங்கும் பல்லுயி ராக்கமும்
சீர்குன்றா தீனுமாந் தேவு
4:-
தேவைத் துதித்துடன் தேவை மழையெனப்
பாவை பொழிந்தனள் பாமழை - நாவைச்
சுழற்றி ழகரஞ் சுவைக்கு மழகை
வழக்கி லமைத்தாள் வடிவு
5:-
வடிவி லடங்கா வடமதுரை மைந்தன்
விடிவி லுலகின் வெளிச்சம் - நொடியிற்
பொடியாய் வினைகள் பொசுங்கும் அவன்தூ
வடிதொழு சிந்தை யடைந்து
(வடிவில் அடங்கா வடமதுரை மைந்தனே விடிவில்லாத உலகின் வெளிச்சமாம் . அவனது தூய அடிகளை நமது சிந்தை அடைய நொடியில் வினைகள் ( இரும், வரும்) பொசுங்குமாம்)
6:-
அடைக்கல மென்றும் அரிபத மென்றே
துடைத்தெழு உன்றன் துயிலை - கிடைக்குமோ
போது இதுபோலப் புள்ளரையன் கோவிலிசை
ஓது மழகே உவப்பு
"அரியின் பதமே ( திருவடி / நாமம் என்ற இரு பொருளும் கொள்ளலலாம்) இறுதிப் புகலென்று அறிந்து விரைவில் துயிலெழுவாய் . இவ்வரிய வைகறைப் பொழுதினில் புள்ளரையன்(கருடாழ்வார்) கோவிலின் ஒலிகள் அழகியவை ஆயிற்றே
புள் - பறவை, அரையன் -அரசன் - புள்ளரையன் என்ற சொற்பயன்பாடு ஆறாம் பாசுரம் படித்து கற்றுக் கொண்டேன்."
7:-
அழகே உருவான ஆதியைப் பாட
குழலின் நறுமணங் கூடும் - விழைவோமே
பத்தி இரசம் பருகத் துயிலகன்(று)
அத்திக்கு முத்திதந்த ஐ
"அழகே உருவான ஆதிப்பிரானைப் பாடிட தயிர் கடையும் ஆய்ச்சியரின் கூந்தலுக்கு இயற்கையில் நறுமணம் வந்து கூடிற்று, அது போல நாமும் பக்திரசத்தை பருக விழைவோம் கஜேந்திரனுக்கு முக்தியளித்த நாராயணனை எண்ணி"
8:-
ஐந்திலொன்றான் மல்ல ரழித்தான் நமக்கருள்செய்
வேந்தின் புகழ்பா விளிப்போமே - பைந்தமிழ்ப்
பண்ணிசை நாச்சியார்ப் பாவையைத் தப்பாமல்
விண்டொழுகும் பேறே விரும்பு
"ஐந்திலொன்றான் - ஐம்பூதங்களில் ஒன்றாத , அதற்கும் அப்பாற்பட்டு நிற்கும் பரம்பொருள்"
9:-
விரும்பிநாம் பாடுவோம் வைகுந்த னென்றே
கரும்பெனப் பாயு(ம்)நம் காதில் - பொருட்கொளா(து)
ஆழ்ந்துறங்குந் தோழி அனந்தல்நீக்(கு) ஆனந்தஞ்
சூழ்ந்தென்றும் வாழ்வாய் சுகம்
"அனந்தல் = மயக்கம், செருக்கு , அதனை நீக்கு தோழியே , (அவ்வாறு நீ நீக்கினால்) ஆனந்தம் சூழும் வாழ்க்கை என்றும் சுகமாக வாழலாம்"
10:-
சுகந்தங் கமழுந் துளசி யணிமால்
உகந்த பறைதருவான் ஊர்க்கு - புகழுரைக்கும்
வேளை புலர்ந்திற்றே மேவுதுயில் நீக்கியவன்
தாளைப் புகற்கொள் சகி
11:-
தாளடைத்துத் தூங்குதியே தாலாட்டோ நாம்பாடும்
கேளினிய கேசவ கீர்த்தனங்கள் - கோளற்ற
நற்குலத்தில் வந்த நயங்கொடியே மாதவனின்
பொற்குவியும் பாதமேநம் போக்கு
கோள் = தீமை / பொய் /குற்றம்
நாங்கள் பாடும்,கேட்பதற்கு இனியதான கேசவ கீர்த்தனைகள் உனக்கு தாலாட்டு போல உள்ளதோ ? அதனால் தான் தாளைப் பூட்டி தூங்கிக்கொண்டு இருக்கிறாயோ ? குற்றமற்ற நற்குலத்தில் பிறந்த அழகான பெண்ணே , மாதவனின் பொற்றாளே நமது போக்கென்று புரிந்து கொண்டு எழுவாய்
தாளடைத்துத் தூங்குதியே தாலாட்டோ நாம்பாடும்
கேளினிய கேசவ கீர்த்தனங்கள் - கோளற்ற
நற்குலத்தில் வந்த நயங்கொடியே மாதவனின்
பொற்றா ளடியேநம் போக்கு
கடைசி அடியை இவ்வாறும் மாற்றலாம்
12:-
நந்தலை வீழ்பனி நாடாதுன் வாசற்கு
வந்தழைக்கு மோசை வருகிலையோ? -அந்தியில் ,
சீதையின் நாதனின் தேனன்ன காதையைக்
கோதையின் பாவழி கொள்
13:-
கொள்வோமா உள்ளங் குளிர அரக்கனைக்
கிள்ளி எறியவந்தோன் கீர்த்திகளை - துள்ளியே
குள்ளக் குளிரக் குளிக்க வருவாய்நீ
தெள்ளிய சித்தந் திரு
திரு- மேன்மை, பாக்கியம்
14:-
திருவமரும் பூக்கண் திறந்துடன் ஆம்பல்
சுருங்கி விழிமூடித் தூங்க, - விரும்புநம் ,
சங்கொடு நேமி சதுர்புயனை நல்லிசையால்
நங்காய்நீ ஏத்து நவின்று
தாமரை மலர்ந்து விட்டது, ஆம்பல் மூடிவிட்டது ( பொழுது புலர்ந்திற்று) அதனால் சங்கு சக்கரம் தரித்த நான்கு கைகளுடைய நமது விருப்பமான நாயகனை நல்லிசையால் வாழ்த்துவாயாக நங்கையே
15:-
நவிற்றிறன் மிக்குடைய நங்காயெம் கூவற்
செவிமடுத்(து) ஏலாயேல் செல்வோம் - புவிகாக்கும்
வல்லான் செருவழிக்கும் மாயன் துதிபாடல்
அல்லா(து) எமக்கே(து) அறம்
நவில் + திறன் = நவிற்றிறன்
16:-
எமக்கே பறைதரும் ஏந்தலினி(து) ஏல
சுமக்கும் அழுக்ககற்றிச் சூழ்ந்தோம் - இமைக்கும்
பொழுதும் பிரியாதெம் பூரணனைக் கண்டு
தொழும்பேறே என்றும் சுர
17:-
சுரந்திடும் செல்வனீருஞ் சோறும் அறம்செய்
நிரைக்கோனே வந்ததெழும் நேரம் - பெருமாட்டி
வாலியோன் உம்பர்கோன் வைகறை வேளையில்
நால்வருமு தித்தல் நலம்
18:-
நலமே பரவிடும் நற்காலைப் போதில்
குலம்விளங்க வந்தபெருங் கோபி - பலம்மிக்க
நந்தர் மருமகளே நப்பின்னாய் கண்விழித்து
வந்தழைப்பாய் எம்மை மகிழ்ந்து
19:-
மகிழ்ந்துறங்கும் கட்டில்மேல் மாயோனே உன்னைப்
புகழ்ந்துரைக்க வந்தோம் பொலிவாய் - பகிர்ந்தளிக்க
எண்ணமின்றி தூயனை ஏலா திருப்பது
வண்ணமோ தங்கட்கு மா
மா - இலக்குமி
20:-
மாதவம் செய்த மலராள் வழிச்சென்று
மாதவன் பாதம் வலம்வருவோம் - பேதமே
இன்றி அருள்புரியும் ஈடில் இணையெமை
இன்புசெய வேண்டும் எழுந்து
21:-
செயமே உருவான செல்வ பகைவர்
பயமுற்றுன் பாதம் பணிவர் - சுயமாய்
உலகினிற் றோன்று மொளியோனே எம்மை
விலகிநிற்கும் வேடம் விடு
22:-
வேடம் பலபூண்ட மேதினியின் வேந்தர்க்குப்
பாடம் புகட்டிப் பணித்தனை - கூடத்திற்
காத்திருக்கு மெம்மைக் கதிர்மதியம் போன்றவுன்
நேத்திரத் தேனால் நிறை
23:-
நேத்திரந் தீப்பொறி நேராய்த் திகழ்ந்திடும்
காத்திரச் சிங்கமே கண்திற - தோத்திரம்
பாடி எழுப்பிடும் பாவை உளமறிந்து
நாடும் வரந்தனை நல்கு
24:-
வரந்தனை நல்கும் மலர்ப்பதம் போற்றிக்
கரங்குவித்து நின்றோம் கனிந்து - சிரந்தாழ்த்தி
மாவலி உன்தாள் வணங்கி அழியாத
காவலி யானான் கடை
காவலி - பாதாள உலகின் காவலன் / அரசன்
25:-
கடைவழிக் காப்பாகக் கண்ணனுனை நாடிப்
படைப்போமே நின்பெருமை பாட்டாய் - துடைத்தெறிந்தாய்
கஞ்சன் கொடிய கருமம் உலகமுய்ய
வஞ்சகன் வீழ்ந்தனன் மாண்டு
26:-
மாண்ட குருப்புதல்வன் மீண்டு முயிர்பெறப்
பாண்டுசங் கானனே பஞ்சசனன் - வேண்டும்
பறையும் இசைப்பாரின் பல்லாண்டும் மாலே
குறைதீ ரருள்தந்து கூடு
கண்ணன் தனது குருதட்சிணையாக சாந்தீபனி முனிவரின் புதல்வனின் உயிரை மீட்க அசுரனான பஞ்சசனனை கொன்று தனது சங்காக்கிக் (பாஞ்சசனீயம்) கொள்கிறான்
27:-
கூடிக் களிப்போமே கோவிந் தனருளால்
நாடி யவனைத்தும் நல்கினனே - பாடியதால்
சூடும் பலகலனுஞ் சோறும் நிறையளித்தான்
சேடன் துயிற்கொண்ட தேவு
28:-
சேடனாய்ச் சேவைகள் செய்யப் பிறந்தோம்நாம்
காடுசென்(று) உண்போம் கலந்தென்றும் - மாடுகளை
மேய்க்கும் உயர்குல வேந்தன் உறவேநின்
சேய்க்கென்றும் வற்றாத சீர்
சேடன்= அடிமை
29:-
என்றென் றுமுனக்கே ஏவல் புரிந்திட
குன்றா மனமருள்வாய் கோவிந்தா - கன்றன்றோ
உன்றன் குடைக்கீழ் உறவாடும் நாங்களுன்னால்
வென்றொழிப்போம் காமங்கள் வேறு
30:-
ஒழிவிலனைப் போற்றி யுரைத்த அமுதப்
பொழிவாக ஆண்டாள் புனைந்த - அழிவிலாச்
சங்கத் தமிழ்மாலை தப்பாமல் பாடுவோர்
துங்கக் கதியடைவர் தோய்ந்து
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக