ஞாயிறு, 25 டிசம்பர், 2022

கந்தர் சஷ்டி அந்தாதி வெண்பாக்கள்

"விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மைகுன்றா
மொழிக்குத் துணைமுரு காவெனு நாமங்கள் முன்புசெய்த
பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி
வழிக்குத் துணைவடி வேலுஞ்செங் கோடன் மயூரமுமே"

 


 கந்தர் சஷ்டியை முன்னிட்டு எழுதிய வெண்பாக்கள் அந்தாதித் தொடையில் கந்தன் கருணையில்

காப்பு 

தம்பியின் எண்ணமே சந்ததம் நின்றிட

நம்பிய பக்தர்க்கு நல்காசி - தும்பிக்கை

வேந்தனே சஷ்டி விரதம் கடைபிடிக்கத் 

தேர்ந்தெமைச்  செய்வாய் சிறப்பு

 

நாள் 1

சிறப்பவன் நாமங்கள் செப்பல் தொடரும்

பிறப்பறுக்கும் வேலினைப் போற்றல் - பறக்கும்

மனந்தனை ஓர்முகம் வைத்தோதும் மாறல்

சனந்தனைக் காக்குந் தகுந்து

(மாறல் = வேல் மாறல்)

 

நாள் 2

தகுந்த வழியில் சரவணன் சிந்தை 

மிகுந்த வலியை விலக்கும் - புகுந்தெமை 

ஆட்கொண் டருள்வாய் அமரருய்ய சூரனெதிர் 

ஞாட்பு புரிந்த குகா

(ஞாட்பு= [போர்)

 

நாள் 3

குகேசன் மயில்மேல் குவலயஞ்  சுற்ற

மகேசன் அருளிய மாங்கனி கிட்ட 

கரிமுகன் வந்து கனியைப் பறிக்க

அரியதவம் பூண்டனை அன்று

 

நாள் 4

அன்று கவிக்கோ அருணைக்கு முத்தமிழ்

ஒன்றும் திருப்புகழ் ஊட்டினான் -என்றும்

தமிழாய் உறையும் தணிகைக்கோன் வாழ்வில்

அமிழ்தாய்த் திகழ்வான் அருந்து

 

நாள் 5

அருந்துயிலன் மைந்தன் அகந்தை அழித்து

பெருந்துயர் போக்கும் பிரணவம் ஈசன்

மடிமேல் அமர்ந்து மதியொளிர் வித்தாய்

வடிவேல் சுவாமிநா தா

(அருந்துயிலன்= மஹாவிஷ்ணு )

 

நாள் 6

தானவரைச் செற்ற தயாபரன் போரிட்டு

வானவரைக்  காத்திட வந்தவன் - கோனவன்

மும்மலம் நீக்கியே மூப்பிலா முன்னலம்

நம்முடனிற் கச்செய்வான் நன்று

 

(மும்மலம்= ஆணவம் கன்மம் மாயை )

(முன்னலம் = இம்மை மறுமை முக்தி)

 

நாள் 7

நன்று முடிந்த நயமிகு நோன்பின்பின் 

சென்று திருமணம் சேவிப்போம் - வென்று 

திரும்பிய வேலனொடு தேவிமணம் காண 

விரும்பிய வாழ்வதனை வேள் 

 

(வேள் = விருப்பம்)

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தோட்டை கட்டளைக் கலித்துறை

தோட்டை மதியாக்கித் தொண்டனைக் காப்பாள் துணையிருந்தாற் கூட்டைத் திருவாழுங் கோவிலா யாக்கலாங் கூற்றவனின் ஏட்டை யழித்தாண் டிளமை நிலைக்கும் வழியடை...