உருவிலங்கைத் தேடி யொருதலைவ னோட
வருவிலங்கைத் தேவன் மைதிலியை மாயத்
துறவியைப் போலத் துகிலுடுத்தி நாடிக் களவாட
ஒருவிலங்கை வீழ ஒருவிலங்கை வாழ
ஒருகணையை யாள ஒளிந்தொளிரு நீயும்
உறுவிலங்கைத் தீய ஒருவிலங்கை யேவி மகிழ்வோனே
செருவிலங்கைச் சேர வருவிலங்கைக் கூட
பெருவிளங்கும் பால மொருமனதா யாக
வொருவிலங்கைக் கோனை யுருகுலைத்தி ராம மகராசா
கருவிலங்கை நாமு மொருவிலங்கைப் போல
உருவிலங்க நாளு மருமலர்க டூவி
செருவொழிந்து வீழ வரமகிழ்ந் தீவாய் பெருமாளே
13 சீர் #விருத்தம்
உரு விலங்கு - மாரீசன்
ஒரு விலங்கு ஐ - வாலி
ஒரு விலங்கு ஐ - சுக்ரீவன்
ஒரு விலங்கு ஐ - ஆஞ்சநேயர்
வருவிலங்கு - பாலம் கட்ட உதவி செய்த விலங்குகள்
ஒரு விலங்கு ஐ - கஜேந்திரன்
மாரீசனைத் தேடி ஒப்பற்ற தலைவனான இராமன் ஓடும்பொழுது
இராவணன் துறவி வேடமிட்டு மைதிலியை களவாடிச் சென்றான்
ஒளிரும் இராமர் வாலி வீழ சுக்ரீவன் வாழ ஒளிந்து கணையெய்தினார்
பின்னர் ஆஞ்சநேயரை வலிமையான இலங்கைக்குத் தூதனாக அனுப்பி தீயிட்டார்
போர் செய்ய இலங்கையை அடைய பிற விலங்குகளின் உதவியால் பெருமையாக விளங்கும் சேது பாலம் ஒருமனதாக அமைத்தார் , அதன் பின்னர் போரில் இலங்கைக் கோனான இராவணனை வென்றார் இராமர் என்னும் மக்களின் அரசன்
எண்ணிலாக் கருவில் மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கும் விலங்கை நாம் செருக்கொழிந்து விட்டொழிய , எங்கள் உருவம் ஒளிர , கஜேந்திரனைப் போல உம்மை வாசமிக்க மலர்கள் தூவி நாளும் தொழும் வரம் அளிப்பாய் பெருமாளே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக