ஞாயிறு, 16 மார்ச், 2025

நேமி திருவிருக்குக் குறள்(நைமிசாரண்யம்)


1.நேமி கானமே நேமி நாதனின்
வாம ரூபமாய்ச் சேம நல்குமே

2.சங்கை யேத்தியே துங்க பாசுர
மங்கை மன்னன்சொல் லங்கந் தொழுமினே

3,அட்ட வெழுத்துடை யட்டக் கரத்துடை
வட்ட சக்கர னிட்டை கொண்மினே

4.கானை மேவிய மானை வேண்டிய
கோனை நாளுமே பேணு மூரிதே

5.என்பளித்தவன் பண்பை யேத்தியே
யின்ப வான்றரு மன்ப னிறைவனே

6.வ்யாச ருரைத்தநஃ றேசு மொழிகளை
ச்வாச மென்றிரு நேச வூரிதே

7.தேவ ராஜனாய்ச் சேவை தந்திடு
மேவு மாயனி னேவல் செய்மினே

8.பாழு கலியினில் வீழப் பழவினை
யாழி கானமே வாழு மிறையுரு

9.சிதய சதிவுட லிதய முதிருமோர்
பதியின் கதிபெற விதியுஞ் சிதையுமே

10.சத்தி நிலமிது பத்தி நிலமிது
சித்த மாகுமே முத்தி நிலைகளே

11.நேமி காடுறை வாம விறையின்மே
னாமன் சுந்தரன் வாய்மை மொழிகளே



சீர் பிரித்து/ பொருள்


1 நேமி கானமே நேமி நாதனின்
வாம ரூபமாய்ச் சேமம் நல்குமே

நேமி கானம்- நைமிசாரண்யம் வாம ரூபாம் - அழகான உரு


2 சங்கு ஐ ஏத்தியே துங்க பாசுரம்
மங்கை மன்னன் சொல் அங்கம் தொழுமினே

சங்கு ஐ - திருமால் , மங்கை மன்னன் - திருமங்கையாழ்வார்


3 அஷ்ட எழுத்து உடை அஷ்டக் கரத்து உடை வட்ட சக்கரன் நிட்டை கொண்மினே

அஷ்ட எழுத்து - எட்டெழுத்து மந்திரம் , இங்குள்ள சக்ர நாராயணர் - எட்டுக் கரத்தை உடைய திருவாழி வடிவினர்

4 கானை மேவிய மானை வேண்டிய
கோனை நாளுமே பேணும் ஊர் இதே

இராமபிரானை நாளும் கொண்டாடும் ஊரிது

5 என்பு அளித்தவன் பண்பை ஏத்தியே
இன்ப வான் தரும் அன்பன் இறைவனே

என்பளித்தவர்- ததீசி மஹரிஷி, அவர் தனது எலும்பை தேவேந்திரனுக்களிக்க விஷ்ணு பதம் பெற்றார் இவ்விடத்தில்

6 வ்யாசர் உரைத்த நல் தேசு மொழிகளை
ச்வாசம் என்று இரும் நேச ஊர் இதே

வியாசர் அனைத்து புராணங்களையும் க்ரந்தங்களையும் தனது சீடர்க்கு உபதேசித்த இடம் இவ்வூரில் உள்ள வியாச கத்தி எனவழைக்கபடுகிறது. வியாச பகவானுக்கு மிக ஏற்றம் அளிக்கப் படுகின்றது இங்கு


7 தேவ ராஜனாய்ச் சேவை தந்திடும்
மேவு மாயனின் ஏவல் செய்மினே

இங்குள்ள திவ்ய தேசத்தில் தேவ ராஜப் பெருமாளாய் சேவை சாதிக்கின்றார் திருமால் 


8 பாழு கலியினில் வீழப் பழ வினை
ஆழி கானமே வாழும் இறை உரு

நைமிசாரண்யமே மஹ விஷ்ணுவின் வடிவாக அமைந்துள்ளது 


9 சிதய சதி உடல் இதயம் உதிரும் ஓர்
பதியின் கதி பெற விதியும் சிதையுமே

இவ்விடம் சக்தி பீடமாக இதயத் தலமாகத் திகழ்கின்றது, இங்கு தான் சதி தேவியின் இதயம் வந்து விழந்தது, திருமால் அதனை நேமியால் வெட்டிய போது. ஆதலால் இது மிகப் புனிதமான தலமாக விளங்குகின்றது


10 சத்தி நிலம் இது பத்தி நிலம் இது
சித்தம் ஆகுமே முத்தி நிலைகளே

சத்தி, பத்தி முத்தி யாவும் சித்தியாகும் நிலமிது


11 நேமி காடுறை வாம இறையின் மேல்
நாமன் சுந்தரன் வாய்மை மொழிகளே

நைமி சாரண்யத்தில் உள்ள அழகான/ இடப்பாகத்தில் உள்ள இறையின் மேல் சுந்தரன் எழுதிய வாய்மை மொழிகள் இவைகளாம் 

திருவிருக்குக் குறள் என்னும் பாடல் வகை திரு ஞான சம்பந்தர் பாடிய திருவீழிமிழலைப் பதிகத்தையொற்றி அமைந்தது

திருஞானசம்பந்தர் வரலாறு ...


May be an image of temple and monument

May be an image of monument and temple

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி