1.
அயனுமான வரனுமான வரியுமான தத்துவம்
பயனுமான பணிவுமான பதியுமான தத்துவஞ்
சயனமாளுங் கடலைவிட்டுச் சரியமைக்கப் பாரினை
நயனமான நவமிநாத னவின்றுரைக்க வுரியனே
2.
உரிமைகொண்ட வுனதுமாத ரிருவரில்லை யன்றியும்
பெருமைகொண்ட புவியையாள சீதையில்லை யுன்னுடன்
கருமைகொண்ட வுன்றன்மேனி கவலையாழு மென்பதா
லருமைகொண்ட யோத்திகூட வழகிழந்து போனதோ
3.
தோளிலேந்து வில்லின்வண்மை தோத்திரஞ்செய் வல்லதே
மாளவைக்கு மரக்கராவி வாழவைக்கும் பத்தரை
மீளவைக்கு மெந்நிலைக்கு நிலைகுலைந்த போதினுந்
தாளிருத்து நாதனோடு தகைமைபெற்ற மேன்மையே
4.
மேன்மையென்றி ராமநாம மிடைவிடாது செப்புதன்
மேன்மையென்றி ராமநாம மிடைவிடாது ளெண்ணுதன்
மேன்மையென்றி ராமநாம மினிமையோடு கரையுதல்
கோன்மையென்ற சொல்லினாழம் பான்மைசொல்லு மந்திரம்
5.
மந்திரங்க ணேரினின்று காணவைக்கு மாந்தரை
மந்திரங்க ணேரினன்று சொல்லவைக்கு மாந்தரை
யந்தரங்க ளாளுகின்ற மாண்புடைத்த தேவரு
முந்திறங்க ளோதவல்ல வேற்றமாள வல்லரே
6.
வல்லருக்கு வன்மைசேர்க்கும் வஞ்சிகொஞ்சு மார்பினாய்
நல்லருக்கு வேள்விகாத்து நன்மைதந்த நேமியாய்
புல்லருக்கும் வீடளிக்கப் பொங்குமன்பி ராகவா
வெல்லிருக்கு குலமுதித்த கோசலைதன் மைந்தனே
7.
மைந்தனாக தந்தைசொல்லை மாண்பளிக்க வந்தனை
மாந்தனாக வாழ்வதற்குப் பாதையாத்துத் தந்த்னை
வேந்தனாக வாழ்வதற்குக் காலகால நின்றனை
நைந்தவாழ்வின் பாதைமாற நாளுமுன்றன் சிந்தனை
8.
சிந்தனைக்குச் சிறப்பளிக்குந் தேவநின்றன் காவிய
மந்தகற்குத் தடுப்பமைக்கு மாதியுன்றன் காவியம்
கொந்தளிக்குந் துன்புகூட கொற்றமற் றடங்கிடும்
வந்துரைக்க வாய்ப்பிருக்க மாருதிக்குஞ் சேவையே
9.
சேவைசெய்ய வந்திழிந்தொஞ் சேவைசெய்து வாழ்மினே
சேவைசெய்ய வாய்ப்பிருக்கத் தேவைவேறு வேண்டுமோ
சேவைசெய்ய நாளுநாளுந் தேவலோக மாள்வருந்
தேவைவந்து பூசைசெய்வ ராவுடைத்த பயனிதே
சீர் பிரித்து
1.
அயனும் ஆன அரனும் ஆன அரியும் ஆன தத்துவம்
பயனும் ஆன பணிவும் ஆன பதியும் ஆன தத்துவம்
சயனம் ஆளும் கடலை விட்டு சரி அமைக்கப் பாரினை
நயனமான நவமி நாதன் நவின்றுரைக்க உரியனே
2.
உரிமைகொண்ட உனது மாதர் இருவர் இல்லை அன்றியும்
பெருமைகொண்ட புவியை ஆள சீதை இல்லை உன்னுடன்
கருமை கொண்ட உன்றன் மேனி கவலை ஆழும் என்பதால்
பெருமை கொண்டு அயோத்திகூட அழகு இழந்து போனதோ
3.
தோளில் ஏந்து வில்லின் வன்மை தோத்திரம் செய் வல்லதே
மாள வைக்கும் அரக்கர் ஆவி வாழ வைக்கும் பத்தரை
மீளைவைக்கும் எந்நிலைக்கும் நிலை குலைந்து போகினும்
தாள் இருத்தும் நாதனோடு தகைமை பெற்ற மேன்மையே
4.
மேன்மை என்றும் இராம நாமம் இடை விடாது செப்புதல்
மேன்மை என்றும் இராம நாமம் இடை விடாது உள் எண்ணுதல்
மேன்மை என்றும் இராம நாமம் இனிமையோடு கரையுதல்
கோன்மை என்ற சொல்லின் ஆழம் பான்மை சொல்லும் மந்திரம்
5.
மந்திரங்கள் நேரில் நின்று காணவைக்கும் மாந்தரை
மந்திரங்கள் நேரில் நன்று சொல்லவைக்கும் மாந்தரை
அந்தரங்கள் ஆளுகின்ற மாண்பு உடைத்த தேவரும்
உம் திறங்கள் ஓத வல்ல ஏற்றம் ஆள வல்லரே?
6.
வல்லருக்கு வன்மை சேர்க்கும் வஞ்சி கொஞ்சு மார்பினாய்
நல்லருக்கு வேள்வி காத்து நன்மை தந்த நேமியாய்
புல்லருக்கும் வீடளிக்கப் பொங்கும் அன்பு இராகவா
எல் இருக்கு குலம் உதித்த கோசலை தன் மைந்தனே
7.
மைந்தனாக தந்தை சொல்லை மாண்பு அளிக்க வந்தனை
மாந்தனாக வாழ்வதற்குப் பாதை யாத்துத் தந்தனை
வேந்தனாக வாழ்வதற்குக் கால காலம் நின்றனை
நைந்த வாழ்வின் பாதை மாற நாளும் உன்றன் சிந்தனை
8.
சிந்தனைக்குச் சிறப்பு அளிக்கும் தேவ நின்றன் காவியம்
அந்தகனுக்குத் தடுப்பு அமைக்கும் ஆதி உன்றன் காவியம்
கொந்தளிக்கும் துன்பு கூட கொற்றம் அற்று அடங்கிடும்
வந்து உரைக்க வாய்ப்பு இருக்க மாருதிக்கும் சேவையே
9.
சேவை செய்ய வந்து இழிந்தோம் சேவை செய்து வாழ்மினே
சேவை செய்ய வாய்ப்பு இருக்கத் தேவை வேறு வேண்டுமோ
சேவை செய்ய நாளும் நாளும் தேவ லோகம் ஆள்வரும்
தேவை வந்து பூசை செய்வர் ஆ உடைத்த பயன் இதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக