திங்கள், 3 மார்ச், 2025

ஆழிதோன்றி விருத்தம்


ஆழிதோன்றி மாலைசூடி யாழியானைக் கொண்டனை
    யண்டர்கோனு முன்னைவேண்டி யட்டகத்தை யேத்திடப்
பாழிலாழும் லோகம்யாவும் பங்கயத்துப் பாவையுன்
    பார்வைநாடி யேங்கிநிற்கப் புன்சிரித்த கோலமாய்
நாழிகாத்து நன்மைசெய்யு நாரணன்றன் காலடி
     நாகமெத்தை பாங்கமர்ந்து சேவைசெய்யுந் தேவிநீ    
யூழியூழி தாண்டிநிற்கு முத்தமன்றன் பாதியால்
     வாழிவாழி யென்றும்வாழி யென்றுவாழ்த்த வேற்றளே

 

 

சீர் பிரித்து
 

ஆழி தோன்றி மாலை சூடி ஆழியானைக் கொண்டனை
அண்டர்கோனும் உன்னை வேண்டி அட்டகத்தை ஏத்திடப்
பாழில் ஆழும் லோகம் யாவும் பங்கயத்துப் பாவை உன்
பார்வை நாடி ஏங்கி நிற்கப் புன்சிரித்த கோலமாய்
நாழி காத்து நன்மை செய்யும் நாரணன் தன் காலடி
நாக மெத்தை பாங்கு அமர்ந்து சேவை செய்யும் தேவி நீ
ஊழி ஊழி தாண்டி நிற்கும் உத்தமன் தன் பாதியால்
வாழி வாழி என்றும் வாழி என்று வாழ்த்த ஏற்றளே

 

பாற்கடலில் தோன்றி திருமாலுக்கு மாலை சூடி அவனை மணாளனாய்க் கொண்டவளான உனக்கு அண்டர்கோனான இந்திரன் மஹாலக்‌ஷ்மி அஷ்டகம் என்னும் துதியைப் பாட, (திருமகள் இல்லாத படியால்) உலகங்கள் யாவும் பரிதவித்துக் கொண்ட போது திருவை நோக்கி அவள்தம் பார்வை கிடைக்காதா என்று ஏங்கும் பத்தற்குத் தன் புன் சிரிப்புக் கோலத்தைக் காட்டி, நேரத்தில் வந்து தன் பத்தர்களைக் காக்கும் நாராயணன் தன் காலடியில் ஆதி சேஷன் என்னும் மெத்தையில் அமர்ந்து அழகாக அவர்க்குப் பணிவிடை செய்யும் தேவியாகிய நீ பல்லூழி தாண்டி நிற்கும் உத்தமனான திருமால் தன் சரிபாதியென்பதால் உன்னை வாழி வாழி என்றும் வாழி என்று வாழ்த்த ஏற்றவளாம் !

You arose from the milky ocean and married MahaVishnu, and Indra sang your praises as Mahalakshmi Ashtakam, for the worlds who were lost without your grace and the people who were longing for the grace of your vision, you showed your smiling face, you serve the Lord Narayana who swiftly comes and sorts out his devotee's problems seated on the bed of Adi Seshan, since you are married to and are half of Sriman Narayana who is beyond various Pralayas, you can be rightly praised as to live long long and for ever!

 What are some of the most beautiful pictures of Lord Vishnu? - Quora


Maha lakshmi images download mah laxmi goddess on lotus images generative  ai | Premium AI-generated image

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி