1.
நாடுவிட்டு நாடுசேர்ந்து மாடுசேர்க்கு மாந்தரோ
யாடுவெட்டி வேள்விசெய்யு மாறுபற்று மாந்தரோ
கூடுவிட்டு கூடுபாயுஞ் சித்தறிந்த மாந்தரோ
வீடுபற்ற வேண்டுமென்ற விழைவளிப்ப ளிறைவியே
நாடுவிட்டு நாடு சேர்ந்து மாடு சேர்க்கும் மாந்தரோ
யாடு வெட்டி வேள்வி செய்யும் ஆறு பற்று மாந்தரோ
கூடு விட்டு கூடு பாயும் சித்து அறிந்த மாந்தரோ
வீடு பற்ற வேண்டும் என்ற விழைவளிப்பள் இறைவியே
2.
அன்னையான வத்தனான வன்புமான தத்துவங்
கன்னலான கசப்புமான விருமைகாட்ட நின்றிடு
முண்மையான பொய்யுமா னுலகமேழு மாகின
ளென்னையாள விரங்கிநிற்கு மீடிலாத விறைவியே
அன்னை ஆன அத்தன் ஆன அன்பும் ஆன தத்துவம்
கன்னல் ஆன கசப்பும் ஆன இருமை காட்ட நின்றிடும்
உண்மை ஆன பொய்யும் ஆன உலகம் ஏழும் ஆகினள்
என்னை ஆள இரங்கி நிற்கும் ஈடு இல்லாத இறைவியே
3.
ஆறுமாறு மழகுமாறு மறிவுமாறும் வாழ்வினிற்
கூறுமாறுங் கொள்கைமாறு மேறுமாறு வாழ்வினி
னீறுமாறு நிற்குமாக மென்றநேர்த்தி வந்தபி
னீறுமாறு காப்பளமெம்மை யாவருக்கு மிறைவியே
ஆறு மாறும் அழகு மாறும் அறிவு மாறும் வாழ்வினில்
கூறு மாறும் கொள்கை மாறும் ஏறு மாறு வாழ்வினில்
நீறு மாறும் நிற்கும் ஆகம் என்ற நேர்த்தி வந்த பின்
ஈறும் ஆறு காப்பள் எம்மை யாவருக்கும் இறைவியே
4.
உருவமைத் துளமமைத் துயிரமைத்து வாழ்வினிற்
கருவமைத் துணவமைத்து கதியமைத்த பின்னரு
மருளமைத்து தெருளமைத் தருளமைத்து நின்றன
டிருவுடைத்த வெங்களம்மை திருபுரத் தழகியே
உரு அமைத்து உ(ள்)ளம் அமைத்து உயிர் அமைத்து வாழ்வினில்
கரு அமைத்து உணவு அமைத்து கதி அமைத்த பின்னரும்
மருள் அமைத்து தெருள் அமைத்து அருள் அமைத்து நின்றனள்
திரு உடைத்த எங்கள் அம்மை திருபுரத்து அழகியே
5.
புரமெரிக்க புன்சிரித்த சடையுடைத்த நாதருஞ்
சிரமறுத்த புரையடங்க திரிந்துவந்த ருலகெலாங்
கரமணைத்த சிரம்விலக்க கடிதடைந்தர் காசியங்
கரவணைக்க காத்திருந்த ளன்னபூர்ணி யன்னையே
புரம் எரிக்க புன் சிரித்த சடை உடைத்த நாதரும்
சிரம் அறுத்த புரை அடங்க திரிந்து வந்தர் உலகு எல்லாம்
கரம் அணைத்த சிரம் விலக்க கடிது அடைந்தர் காசி அங்கு
அரவணைக்க காத்து இருந்தள் அன்னபூர்ணி அன்னையே
6.
அமுதெடுக்க வலைகடைந்த வன்றுவந்த தேவியு
மிமயவற்குப் புதல்வியாக வினிதுதித்த தேவியுங்
கமலனுக்குச் சக்தியான கலையுடைத்த தேவியு
நமையுயர்த்த பலவென்றான நளினமான விறைவியே
அமுது எடுக்க அலை கடைந்த அன்று வந்த தேவியும்
இமயவற்கு புதல்வியாக இனிது உதித்த தேவியும்
கமலனுக்குச் சக்தியான கலை உடைத்த தேவியும்
நமை உயர்த்த பல என்றான நளினம் ஆன இறைவியே
7.
தவமியற்றித் தரணியாளுந் தகைமைபெற்றுக் கொள்ளலா
நவமுடைத்த வழகுதேக நனிபுனைந்து கொள்ளலாஞ்
சிவநிலைக் குயர்வதற்குச் சீவனேர்த்தி கொள்ளலா
முவமையற்ற விறைவிநம்மை யுள்ளிருந் தியக்கவே
தவம் இயற்றித் தரணி ஆளும் தகைமை பெற்றுக் கொள்ளலாம்
நவம் உடைத்த அழகு தேகம் நனி புனைந்து கொள்ளலாம்
சிவ நிலைக்கு உயர்வதற்குச் சீவன் நேர்த்தி கொள்ளலாம்
உவமை அற்ற இறைவி நம்மை உள் இருந்து இயக்கவே
8.
முழுமதிக் கழகளிக்கு மூரலுன்றன் மூரலே
மழுவுடைத்த நாதருக்கு மகழ்வளிக்கு மூரலே
குழவிகாண வகமகிழ்த்து மழகுடைத்த மூரலே
யிழிவில்வாடு மெம்மையேற்று மிறைவிசிந்து மூரலே
முழு மதிக்கு அழகு அளிக்கும் மூரல் உன்றன் மூரலே
மழு உடைத்த நாதருக்கும் மகிழ்வு அளிக்கும் மூரலே
குழவி காண அகம் மகிழ்த்தும் அழகு உடைத்த மூரலே
இழிவில் வாடும் எம்மை ஏற்றும் இறைவி சிந்து மூரலே
9.
உடலுமற்ற வுயிருமற்ற வுணர்வுமற்ற வெளியினிற்
சுடலைநாத னுடனடிக்கு மந்தமில்சு ஹாசினி
விடலையான யெம்மையேற்ற விழைவுகொண்ட கருணையை
நடலைநீக்கு சத்தியாக நாளு(ம்)போற்றி யுய்வொமே
உடலும் அற்ற உயிரும் அற்ற உணர்வும் அற்ற வெளியினில்
சுடலை நாதன் உடன் நடிக்கும் அந்தமில் சுஹாசினி
விடலை ஆன எம்மை ஏற்ற விழைவு கொண்ட கருணையை
நடலை நீக்கு சத்தியாக நாளும் போற்றி உய்வோமே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக