யாவுமான வேலவா - எம்
நோவுமாய வோடிவா
தாயுமான தூயவா - இம்
மாயைமாய வேல! வா
தேவசேனை நாயகா -இச்
சீவசேனை நாடிகா
காயமேவு நேயவா - எங்
காயமாய சேய! வா
(சிந்து)
அழியா வழகு மவனே
அழியு மழகு மவனே
மொழியார் மொழியு மவனே
மொழியா மொழியு மவனே
கழியா வினையு மவனே
கழிக்குங் கருணை யவனே
விழியார் விழியு மவனே
விழையும் விழைவு மவனே
(அறு சீர் ஆசிரிய விருத்தம்)
தந்தையான தாயுமான சேயுமான பெற்றியோய்
விந்தைமேவு வேடனான வள்ளிபங்க வெற்றியோய்ச்
சிந்தையாளு சொந்தமாகக் கந்தநின்னைக் கொள்ளவே
முந்திவந்து செந்திலேகுஞ் சிந்துநீர்த்த ரங்கமே
(எழுசீர் சந்த விருத்தம்)
நீர்மே லெழுத்தா நிலையா நினைவை
யார்மே லிருத்தப் பெறுவோம் பலனைச்
சூர்மேல் விடுத்த சுரபூ பதிகைக்
கூர்வேல் வழுத்தக் குறையா தறிவே
(கலி விருத்தம்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக