வியாழன், 10 ஜூலை, 2025

கருமாதி கல்யாணம் ஒன்று வெண்பாக்கள்

 

தாழ்வி லிருந்துந் தலைக்கென்று மேறாது பாழ்நரகு தோன்றும் புனிதமாய் - வாழ்விற் பெருவாரி யின்பம் பிறவா தொழியுங் கருமாதி கல்யாண மொன்று

 

விடுதலை மாயும் விதியெரிப் பாயும் சுடுதலை யேற்கு முடறா - னடுவிற் சரமாரித் தீவேள்வி சார்ந்துரைக் கேட்குங் கருமாதி கல்யாண மொன்று

எங்கு மெதிலு மினிதென் பதழியும் பங்கம் பழிசொல்லே வாழ்நிறையு - மங்க முருமாறி பித்த முடனனைத்து மாய்க்கும் கருமாதி கல்யாண மொன்று

பட்டாளஞ் சூழ்ந்து பறையோசை கானிறையுஞ் சுட்டாலு மெய்யறியா மாந்தவின- மிட்டா லுருவே றுடலெடுக்கு மோயாது காண்பாய்க் கருமாதி கல்யாண மொன்று 

உள்ளதும் போகு மொழுங்கோ வறனீங்கும் விள்ளவும் வேண்டுமோ வேறேதுந் - தெள்ளி னொருபகுதி கூட வுறையா தறிவிற் கருமாதி கல்யாண மொன்று 

ஒருகாலு மேன்மையிலை யூழா லுழன்று பரிகாசஞ் செய்பொருளாய்ப் பாரார்முன் வெஃகு மொருநாளே யீதென் றுணர்ந்திடுவாய் நெஞ்சே கருமாதி கல்யாண மொன்று

மறையோதி வாழ்வடங்கு மாண்பழியு நன்றே முறையேது கண்டீர் முறையோ - வுறையா லுருவாகுங் கங்கை யுடன்காப்பா மந்நாள் கருமாதி கல்யாண மொன்று

ஆசை யடிமடியு மாண்மை யடிபணியும் பாசப் பகல்வேடம் பாராயோ- காசும் விரையாகுங் கேளிர் நிரைவருநன் னாளாங் கருமாதி கல்யாண மொன்று 

மாயத் திரைவிலக மாயோ னெறிவிளங்க வேயப் படுதேகம் வீச்சறவே - தூய திருநாடு சென்றடையு மாறீதாம் வெல்லுங் கருமாதி கல்யாண மொன்று 

  

 

 

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி