வியாழன், 3 ஜூலை, 2025

அரியென்ற விருத்தம் (திருவிந்தளூர்)

 அரியென்ற வார்த்தை யறியாத வாழ்க்கை
        அழிவென்ற போக்கை யளியாதோ
அகமொன்று வாக்கை யணியான யாக்கை
       அறனின்ற வாழ்க்கை அதனூடே
அழகென்ற கூற்றை யடைகின்ற பேற்றை
      அறிகின்ற வாற்றை விளைவாகப்



புரிகின்ற வேட்கை புலனாளு மாள்கை
      புகழ்வென்றி மாட்சி பரிசாக
நிரைநின்ற வாழ்க்கை நிலையான சேர்க்கை
      நிசமொன்று மூழ்க்க ணொளிவீசப்
புவிநின்ற நோக்கை நிரையாளுந் தேக்கட்
     பொலிகின்ற நோக்கா யருளாயே

தரையன்று கோட்டிற் றளராது தூக்கித்
    திரைசென்று மீட்ட வடிவேன
மறைநின்று தாக்கிக் கவிவாலி வீழ்த்தச்
    சரமொன்று வோட்டு சிலைராய
மரையொன்று பார்த்து மனையாளு(ங்) கேட்க
    வனமன்று பாய்த்த கழல்வீர
 

சிரமன்று நீக்கிச் சிவனாரை நோக்கித்
     தவநின்ற யாழ்க்கை யில(ங்)கேசன்
புரமன்று தாக்கிப் புரைதீர மாய்த்துத்
    துணையன்று காத்த ரகுராம
மதிநின்று போற்று மறைமீள வாழ்த்துந்
    திருவிந்த ளூர்வாழ் பெருமாளே

 

21சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 

 

தனதான தான தனதான தான 

தனதான தான தனதான 

 

 

சீர் பிரித்து 

அரி என்ற வார்த்தை அறியாத வாழ்க்கை அழிவென்ற போக்கை அளியாதோ அகம் ஒன்றும் வாக்கை அணி ஆன யாக்கை அறன் நின்ற வாழ்க்கை அதன் ஊடே அழகு என்ற கூற்றை அடைகின்ற பேற்றை அறிகின்ற ஆற்றை விளைவாக

 

புரிகின்ற வேட்கை புலன் ஆளும் நேர்த்தி புகழ் வென்றி மாட்சி பரிசு ஆக நிரை நின்ற வாழ்க்கை நிலையான சேர்க்கை நிஜம் ஒன்றும் ஊழ்க்கண் ஒளிவீச புவி நின்ற நோக்கை நிரை ஆளும் தேக் கண் பொலிகின்ற நோக்காய் அருளாயே

 

தரை அன்று கோட்டில் தளராது தூக்கி திரை சென்று மீட்ட வடிவு ஏனம் மறை நின்று தாக்கி கவி வாலி வீழ்த்த சரம் ஒன்று ஓட்டு சிலைராய! மரை ஒன்று பார்த்து மனையாளும் கேட்க வனம் அன்று பாய்த்(ந்)த கழல் வீர

 

சிரம் அன்று நீக்கி சிவனாரை நோக்கி தவம் நின்ற யாழ் கை இலங்கேசன் புரம் அன்று தாக்கி புரை தீர மாய்த்து துணை அன்று காத்த ரகுராம! மதி நின்று போற்று மறை மீள வாழ்த்தும் திருவிந்தளூர் வாழ் பெருமாளே    

 

பொருள்-

அரி என்ற வார்த்தை அறியாத வாழ்க்கை அழிவென்ற போக்கில் நம்மை ஆழ்த்தி விடாதோ? (ஆம் ஆழ்த்திவிடும்) 

மனமும் வாக்கும் ஒன்றி அதற்கு அணியாக நம் உடல் நின்று அறம் வழுவா வாழ்க்கை அதன் ஊடாக அழகு என்னும் கூற்றை அடைகின்ற பேற்றை அறிகன்ற வழியை பெற்று விளைவாக நாம் புரிகின்ற வேட்கையும் புலனடக்கமும் நேர்த்தியாக பெற்று அதனால் வெற்றி புகழ் மாட்சி பரிசாகக் கிட்டும் ,ஒரு ஒழுங்கில் அமைகின்ற வாழ்க்கை நிலையான சேர்க்கை சத்தியத்தில் பயணிக்கும் வினைகள் இவை ஒளிவீசும்படியாக கிட்டும்,  இவ்வளவு மேன்மை பெற்றும் அரியின் மீது பத்தி இல்லாவிடில் இது எதுவும் சிறக்காது ஆதலால் , புவியின்கண் தருமம் தவறாக இவ்வனைத்தையும் பெற்றும், எமது நோக்கை ஆநிரைகளை ஆளும் கண்ணனின் கண் திருப்ப வேண்டும் என்று விண்ணப்பிக்கின்றோம். அதாவது 4 புருஷார்த்தங்களும் ஹரி தான் அருளவேண்டும் என்ற வாறு

 

இவ்விண்ணப்பத்தை நாம் யாரிடம் வைக்கிறோம் என்றால்- அன்று வடிவான வராக அவதாரம் எடுத்து தனது மருப்பில் பூமியைத் தூக்கிக் காத்தவனுமான, வாலியை மறைந்திருந்து அம்பெய்திய வில்லரசுனமான , சீதாபிராட்டிக்காக மானைப் பின்றொடர்ந்து வனம் பாய்ந்த கழல்வீரனுமான, தனது சிரத்தையே ஆஹுதியாகக் தந்து சிவபெருமானிடம் தவமிருந்து வரம் பெற்றவனான யாழிசை வல்லவன் இராவணனையும் அவன் வாழ்ந்த ஊரையும் மாய்த்து தன் துணைவியை மீட்டவனுமான இரகுராமன், அவனே சந்திரன் போற்றி நிற்பவனாகவும், வேதங்களை மீட்டெடுத்தால் அவைகளும் வாழ்த்தும் பரிமளரங்கநாதனாய் திருவிந்தளூர் என்னும் திவ்விய தேசத்தில் வாழ்கின்றான், அவனிடம் வைக்கின்றோம் 

 

 படம்

படம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி