நதியறுகு பணிமதியு முடிபுனைய
விதிதலையி னொருகளையு(ஞ்) சினவிறலமா
சதியருகு மணிமிடறி னணிவிடமு
மமுதனைய மருவுமுரி கரியதளநாந்
துதியுருகி வுனைநினைய வினையகல
விதிவளைய வரமருளு மலைசிலையபார்
வதியுருகி வுனையணைய வளையளிடு
குறிபுனையு மடைவுதரு தனியொருவனே
சீர் பிரித்து
நதி அறுகு பணி மதியும் முடி புனைய விதி தலையின் ஒரு களையும் சின விறல மா சதி அருகு மணி மிடறின் அணி விடமும் அமுது அனைய மருவும் உரி கரி அதள நாம் துதி உருகி உனை நினைய வினை அகல விதி வளைய வரம் அருளும் மலை சிலைய பார்வதி உருகி உனை அணைய வளையல் இடு குறி புனையும் அடைவு தரு தனி ஒருவனே
தனதனன தனதனன தனதனன தனதனன
தனதனன தனதனனா
பொருள்
கங்கை நதி, அறுகு, பாம்பு மதியையும் சடையில் புனைபவனே, சினந்து பிரமனின் ஒரு தலையைக் கொய்த விறலனே, மா சதிதேவி அருகில் இருக்க உனது மிடற்றில் அணியும் விடம் கூட அமுதுமாய் மாற நிற்கும் யானையின் உரியைப் புனைபவனே, பார்வதி உன்னை உருகி அணைக்க அவள் பக்திக்கு உவந்து அவள் வளையலால் இடும் குறியைப் புனையும் மோக்ஷங் தரும் கச்சி ஏகம்பனே நாங்கள் உன்னை உருகித் துதிக்கவும் , உன்னை நினைக்கவும் எமது வினை அகலவும், விதி வளைந்து கொடுத்து மாறவும் வரும் அருள்வாய் மேரு மலை வில்லாக கொண்ட பெருமானே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக