சனி, 1 நவம்பர், 2025

முதல் திருவந்தாதி

அரனா ரணாம மான்விடை புள்ளூர்தி

யுரைநூன் மறையுறையுங் கோவில் - வரைநீர்

கரும மழிப்பளிப்புக் கையதுவே னேமி

யுருவமெரி கார்மேனி யொன்று



இது முதல் திருவந்தாதிப் பாசுரம்

அரன் நாரணன் நாமம் ஆன்விடை புள்ளூர்தி

உரை நூல் மறை உறையும் கோவில் வரை நீர்

கருமம் அழிப்பு அளிப்புக் கை அது வேல் நேமி

உருவம் எரி கார் மேனி ஒன்று


அரன் நாரணன் என்பது நாமம் ஆன் விடை புள் ஆகியது ஊர்தி

உரை நூல் (ஆகமம்) மறை (வேதம்) ஆகியவை நூல்கள் கோவில் - மலையும் நீரும்

செய்யும் தொழில் அழித்தல் காத்தல், கையில் உள்ள ஆயுதம் சூலம் சக்கரம் உருவம்

எரி மற்றும் கார் ஆகிய இரண்டும் ஒன்று ஆகவே சிவனும் திருமாலும் ஒன்று என்று சொல்லும்படி அமைந்த பாசுரம்


ஒரு விளையாட்டாக இப்பாடலை வேறு மாதிரி பிரித்துப் பார்ப்போம்


அரன் ஆரணன் ஆம் அம் மான் விடை புள்ளூர்தி 

உரை நூல் மறை உறையும் கோவில் வரை நீர்

கருமம் அழிப்பு அளிப்புக்கு ஐ யது ஏன் நேமி

உருவம் எரி கார் மேனி ஒன்று 


பொருள் கோள் முறை - விடையூர்தியும் புள்ளூர்தியும் கொண்ட, வரை நீர் கருமம் அழிப்பு அளிப்புக்கு ஐயாகிய யதுவே, அரனாகவும் ஆரணனாகவும் ஆகின்றான், அதுமட்டுமன்றி அவனே (கால)நேமியாக ஆகின்றான், அவனே ஒரே சமயத்தில் எரியுருவமாகவும் கார்மேனியனாகவும் ஒன்றி யுள்ளான்.

அரனாகவும் நான்முகனாகவும் இழியும் அம் மான் யதுவாகிய கண்ணனே ஆகவே அவன் விடை புள் இரண்டும் ஊர்தியாகக் கொள்பவன் விடை சிவனின் ஊர்தி ஹம்சமாகிய புள் நான்முகனின் ஊர்தி, அதைப் போன்றே ஆநிரையையும் தன்னதாகக் கொள்வான் புள் கருடனையும் கண்ணன் கொள்வான், அவன் செய்த உரை நூலான கீதையே வேதங்கள் தங்கும் கோவில் ஆகும் , ஆழி சூழ் உலகத்தில் பிறப்பெடுத்து அனைத்துயிர்களும் செய்யக் கூடிய கருமத்திற்கு ஏற்ப அளிப்பும் அழிப்பும் தரக்கூடிய தலைவன் அவனே, அது மட்டும் ஏன் நேமி ஆகிய காலச்சக்கரமும் அவனே அவன் தீயவர்களை அழிக்கும் நெருப்பாகவும் நல்லோர்களைக் காக்கும் கார்மேகமாகவும் ஒரே சமயத்தில் இருப்பவனாம் !





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி