நோற்றுச் சுவர்க்க நுழைவரி னீற்றிடம்
காற்றை யனைய கடந்துள் ளுறைபவன்
கூற்றன் வருந்தினங் காத்தருள் கொற்றவன்
தோற்ற மழிவிலிச் சுந்தரத் தோளினன்
ஞாற்று மறிந்தவன் ஞானச் சுடரொளிச்
சாற்றப் பறைதருந் தாமோ தரனையே
ஏற்று வழியிலக் கென்றிசை மாதவள்
ஏற்றத் தமிழ்ப்பா வியம்பேலோ ரெம்பாவாய்
நோற்று சுவர்க்கம் நுழைவரின் ஈற்றிடம்
காற்றை அனைய கடந்து உள் உறைபவன்
கூற்றன் வரும் தினம் காத்து அருள் கொற்றவன்
தோற்றம் அழிவு இலி சுந்தர தோளினன்
ஞாற்(ன்)றும் அறிந்தவன் ஞான சுடர் ஒளி
சாற்ற பறை தரும் தாமோ தரனையே
ஏற்று வழி இலக்கு என்று இசை மாது அவள் (மா தவள்)
ஏற்ற தமிழ் பா இயம்பு ஏலோர் எம்பாவாய்
நோம்பு நோற்றுச் சுவர்க்கம் நுழைவரின் ஈற்றிலக்காய் இருப்பவன், காற்றைப் போல் உள்ளும் புறமும் வியாபித்திருப்பவன், இயமன் வரும் தினம் நம்மை காத்து அருளும் கொற்றவன், தோற்றம் அழிவு இல்லாதவன், சுந்தரத் தோள் கொண்டவன், காலத்தை மொத்தமும் அறிந்தவன், ஞானத்தின் சுடரொளி,அவன் நாமத்தை ஓயாதோதும் அடியார்க்கு வீடு பேறு அளிக்கும் சௌலப்பியன் (எளிமை குணம் பொருந்தியவன்) தாமோதரனையே உபாயமாகவும் உபேயமாகவும் ஏற்று இசைத்த மாது கோதையின் ஏற்றம் மிகுந்த தமிழ்ப் பாசுரத்தை இயம்புவோமாக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக