செவ்வாய், 30 டிசம்பர், 2025

மருதுதைத்து விருத்தம்

 மருதுதைத்து மாமகிழ்த்தி வாகைசூடு மரசனே

கருதலார்க்கு வேங்கையா கனிந்தவர்க்குக் கற்பமா

விரதமுற்று வேண்டிநிற்க வீடுகிட்டு நாளிலே

ஒருதவத்து மொட்டிலேனெ னாலகற்று மாயனே


மருது உதைத்து மா மகிழ்த்தி வாகை சூடும் அரசனே
கருதலார்க்கு வேங்கையா கனிந்தவர்க்குக் கற்பமா
விரதம் உற்று வேண்டி நிற்க வீடு கிட்டும் நாளிலே
ஒரு தவத்தும் ஒட்டிலேன் என் ஆல் அகற்று மாயனே

மருத மரமாக நின்றவர்களை உதைத்துத், திருமகள் என்றும் மகிழும் படியாக வெற்றி வாகை சூடும் அரசனே, எதிரிகட்கு வேங்கையைப் போன்றும் கனிந்த அடியார்கட்குக் கல்ப தரு போன்றும் விளங்குபவனே, மாயனே, விரதமுற்று உன்னை வேண்டி நின்றால் வீடு கிட்டும் என்ற உயர்ந்த வைகுந்த ஏகாதசி நாளாக இது இருந்தும் ஒரு தவமும் ஒட்டாது வீணே திரிகின்ற எனது விடத்தை அகற்றுவாயாக

மருதம், மா, மகிழம், வாகை,அரசு, வேங்கை, கல்பம், ஆல் என்னும் எண்மரங்கள் பாட்டில் பயிலப் பட்டுள்ளது



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி