சனி, 20 டிசம்பர், 2025

மார்கழி-5

 வடமதுரை மைந்தன் வனசையவண் மன்னன்

மடமயில்க ணாடு மனங்கவர் கள்வன்

குடமெடுத் தேறிவிட்டுக் கூத்தாட வல்லன்

படமெடுத் தாடு பணிநடிக்குஞ் செல்வன்

விடமொழித்து வீடு விரைவளிக்கு நாதன்

அடைவதற் காற்றை யகமொழிந்த பாவை

கொடையறிந்து கொண்டார் குவலயத்தை யாள்வார்

படையெதற்குப் பாரிற் பகரேலோ ரெம்பாவாய் 



வட மதுரை மைந்தன் வனசை அவள் மன்னன்

மட மயில்கள் நாடு மனம் கவர் கள்வன் 

குடம் எடுத்து ஏறி விட்டுக் கூத்தாட வல்லன்

படம் எடுத்து ஆடு பணி நடிக்கும் செல்வன்

விடம் ஒழித்து வீடு விரைவு அளிக்கும் நாதன்

அடைவதற்கு ஆற்றை அகம் மொழிந்த பாவை

கொடை அறிந்து கொண்டார் குவலயத்தை ஆள்வார்

படை எதற்கு பாரில் பகர் ஏலோர் எம்பாவாய் 


வட மதுரை மைந்தனும் வனசையான தூமலராள் திருமகள் கேள்வனும், மடவார் (அனைத்துயிர்களும் பெண்களே இவ்வண்டத்தில் புருஷோத்தமனைத் தவிர) மனம் கவர் கள்வனும் குடங்கள் எடுத்தேறிவிட்டு கூத்தாடுவதில் வல்லவனும், படம் எடுத்து ஆடும் பாம்பின் (காளிங்கன்) மீது நடனம் புரியும் செல்வனும் அப்பாம்பின் விடத்தை சீர் செய்தது போல் நமது விடமாகிய பன்னெடுங்காலமாக சேர்த்த இரு வினைகளை அழித்து வீடு பேறு விரைவில் அளிக்கக் கூடியவனுமான கண்ணனை அடையும் வழியை அகப் பாடலில் மொழிந்த பாவையான ஆண்டாளின் கொடையை அறிந்தவர் இக்குவலயத்தை ஆள்வார், அவர்கட்குப் படைபலம் எதற்கு என்று பகர்வீர்களாக பாவைகளே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி