வெள்ளி, 26 டிசம்பர், 2025

மார்கழி - 6

புள்ளூர்தி மாமாயன் புன்னாகக் கூத்தாடி 

கள்ளூறும் பாங்காகக் கண்ணறியாச் சேட்டைசெயு

முள்ளார்ந்த நிட்டையமர் யோகிகளின் றீர்சோதி 

கொள்ளாருங் கண்மயங்குங் கோவிந்தன் கோபாலன்

வெள்ளோதங் கண்வளரும் வீடருளும் வேந்தனையே

தெள்ளார்ந்த சொன்மாலை தீந்தமிழா னன்கமைத்த

கிள்ளைமகள் கோதைமொழி கேட்டு முறக்கமென்ன 

எள்ளாளோ யீன்றவளு மின்றேலோ ரெம்பாவாய் 


சீர் பிரித்து -

புள் ஊர்தி மா மாயன் புன் நாகக் கூத்தாடி

கள் ஊறும் பாங்கு ஆக கண் அறியாச் சேட்டை செய்யும் 

உள் ஆர்ந்த நிட்டை அமர் யோகிகளின் தீர் சோதி 

கொள்ளாரும் கண் மயங்கும் கோவிந்தன் கோபாலன் 

வெள் ஓதம் கண் வளரும் வீடு அருளும் வேந்தனையே

தெள் ஆர்ந்த சொல் மாலை தீம் தமிழால் நன்கு அமைத்த

கிள்ளை மகள் கோதை மொழி கேட்டும் உறக்கம் என்ன 

எள்ளாளோ ஈன்றவளும் இன்று ஏலோர் எம்பாவாய் 



கருடனை வாகனமாகக் கொண்ட மாமாயன், காளிங்கன் என்னும் புன்னாகத்தின் மீது நடனம் புரிந்தவன், கள் ஊறும் வகையில் யாருக்கும் புலப் படாத படி பல சேட்டைகள் செய்யும், தன்னுள் அழகான தியானத்தில் அமர்ந்திருக்கும் யோகிகளின் முழுமையான சோதி, அவனை விரும்பாதவர்களும் கண்டால் கண் மயங்கும் கோபாலன் கோவிந்தன், பாற்கடலின் மீது யோக நித்திரை கொள்ளும் வீடு பேற்றை அருளும் வேந்தனானவனையே தெளிவான அழகிய சுவையான தமிழால் சொல் மாலை நன்கு அமைத்த கிள்ளை போன்ற பெண்ணான கோதையின் மொழியைக் கேட்டும் உறக்கம் தகுமோ, அவ்வாறு செய்தால் நம்மை ஈன்றவளும் நம்மை எள்ளி நகையாட மாட்டாளோ இன்று !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி