ஆரா வமதுனை யாயர்தங் கண்ணனைப்
பாரா டலைவனைப் பன்றியாய்க் காப்பனை
யூரா ருறவனை யுள்ளத் துறைவனைத்
தாரைக் கணவனைச் சாய்த்தவோர் வில்லனை
நாரா யணனை நயந்துருகிப் பத்தியினா
லோரா துயர்வில்லை யென்றுணர்த்தப் பாங்குடன்
சீரார் தமிழ்மாலை தேர்ந்துரைத்த கோதைசொல்
சாரா திலைவாழ்வு சாற்றேலோ ரெம்பாவாய்
ஆரா அமுதனை ஆயர் தம் கண்ணனை
பாராள் தலைவனை பன்றியாய் காப்பனை
ஊரார் உறவனை உள்ளத்து உறைவனை
தாரை கணவனை சாய்த்த ஓர் வில்லனை
நாரா யணனை நயந்து உருகி பத்தியினால்
ஓராது உயர்வு இல்லை என்று உணர்த்த பாங்குடன்
சீர் ஆர் தமிழ் மாலை தேர்ந்து உரைத்த கோதை சொல்
சாராது இ(ல்)லை வாழ்வு சாற்று ஏலோர் எம்பாவாய்
தெவிட்டாத அமுதம் போன்றவனை, ஆயர்கள் தம் கண்ணனைப் பூமிப் பிராட்டியின் கேள்வனை, பன்றியாய்த் தோன்றி உலகங்காத்தானை, ஊரில் உள்ள அனைத்துயிர்கட்கும் உறவானவனை, உள்ளித்தில் உறையும் அந்தர்யாமியைத், தாரையது கணவனான வாலியை அம்பெய்தி வீழ்த்திய ஒப்பற்ற வில்லவனை, நாராயணனை நயந்து உருகிப் பத்தியின் பெருக்கினால் ஓராது உயர்வு இல்லை என்று உணர்த்தும் வகையாக அழகான சீர் தமிழ் மாலை தேர்ந்து உரைத்த ஆண்டாள் சொல்லைச் சாராது எமக்கு வாழ்வு என்பது இல்லை என்பதைச் சாற்று!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக