சனி, 17 ஜனவரி, 2026

திருமால் மேல் குறள் வெண்பா


1.காலை யெழுந்தது மன்புடையார் மாலை

வணங்கி மலருவர் நன்று



காலை எழுந்ததும் அன்புடையார் மாலை

வணங்கி மலருவர் நன்று 


காலை எழுந்த உடன் அன்பு மிக்க அடியார்கள் திருமாலை வணங்கி மலர்வார்கள் நன்றாக


2.சோலை மலையி லரசாளு  மாலை

வணங்க வளம்பெறும் வாழ்வு


சோலை மலையில் அரசு ஆளும் மாலை

வணங்க வளம் பெறும் வாழ்வு 

மாலிருஞ்சோலை என்றழைக்கப் படும் திவ்ய தேசத்தின் அரசாளும் திருமாலை வணங்க வாழ்வானது வளம் பெறும் 


3.திருவளர் மார்பனை யெண்ணா துருவளர்ந்

துற்ற பயனென் னுயிர்க்கு


திரு வளர் மார்பனை எண்ணாது உரு வளர்ந்து 

உற்ற பயன் என் உயிர்க்கு 


திருமகள் வளரும் மார்பனான திருமாலை எண்ணாது உடலெடுத்த உயிர் உற்ற பயன் தான் என்ன 


4.சிலைவளைத்த கோமான் சிறப்பைத் தலைவணங்கிச்

சாற்றுத் தமிழா லினிது

சிலை வளைத்த கோமான் சிறப்பைத் தலை வணங்கி

சாற்று தமிழால் இனிது 

வில்லை வளைத்த கோமானான இராம பிரான் சிறப்பைத் தலை வணங்கி அவன் துதியை இனிய தமிழால் கூறுக 


5.உரந்திகழுந் தூமலராள் கேள்வ னருந்தமி

ழாள்வார்சொ லேற்பான் மகிழ்ந்து


உரம் திகழும் தூ மலராள் கேள்வன் அரும் தமிழ்

ள்வார் சொல் ஏற்பான் மகிழ்ந்து 


தனது மார்பில் திகழும் தூய மலரில் வாசம் செய்யும் தேவியான திருமகளினது நாதன் அரும் தமிழ் ஆள்பவரின் சொல்லை மகிழ்ந்து ஏற்பான்!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி