ஞாயிறு, 18 ஜனவரி, 2026

வேல் மேல குறள் வெண்பாக்கள்

1.வென்றிதரும் வேலிருக்க வச்சமென் கொன்றைசடைக்

கூத்தற்கு மாசா னது


வென்றி தரும் வேல் இருக்க அச்சம் என் கொன்றை சடை

கூத்தன்கும் ஆசான் அது 


தனது சடாபாரத்தில் கொன்றை மலர்களை அணிந்த கூத்தனான சிவபெருமானுக்கும் ஆசானான முருகனின் வெற்றி தரும் வேலிருக்க அச்சம் எதற்கு!


2.வள்ளியமை கண்ணிகர் வேலுண்டே யள்ளிவர

மார்க்கு மளிக்க வுடன்


வள்ளி அ(ம்)மை கண் நிகர் வேல் உண்டே அள்ளி வரம்

ஆர்க்கும் அளிக்க உடன் 


வரங்களை யாவர்க்கும் உடனடியாக அள்ளித் தர வள்ளி அம்மையாரின் கண்ணுக்கு நிகரான வேல் உண்டே !


3.ஆதிபரை தந்தவேல் காப்பிருக்க வாதெதிர்ந்த

வாழ்வுங் கடத்த லெளிது


ஆதி பரை தந்த வேல் காப்பு இருக்க வாது எதிர்ந்த 

வாழ்வும் கடத்தல் எளிது 

ஆதி பரை (பரா சக்தி) தனது குமரனுக்குத் தந்த வேலானது காப்பாக இருக்க, சண்டையும் சச்சரவும் எதிர்கொள்ளும் வாழ்வையும் எளிதாகக் கடக்கலாம் 


4.மும்மல நீக்கவல்ல வேலேந்து பெம்மான்

பிணியறுக்க யாவு நிறைவு


மு மலம் நீக்க வல்ல வேல் ஏந்து பெம்மான் 

பிணி அறுக்க யாவும் நிறைவு 

ஆணவாதி மூன்று மலங்களையும் நீக்க வல்ல வேல் ஏந்தும் பெம்மானான முருகப் பெருமான் பிணி அறுக்க யாவுமே நிறைவாம் 


5. வாரிதி வற்ற மலைதுளைத்த நேரி

னிமலன்வே லுண்டே துணை


வாரிதி வற்ற மலை துளைத்த நேர் இல் 

நிமலன் வேல் உண்டே துணை 


நிமலனான முருகனது கடலை வற்றச் செய்ததும் கிரௌஞ்ச மலையை துளைத்ததுமான நிகர் ஒன்றில்லாத வேல் துணையாக உண்டே !





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி