ஓயா துனைநாளு முள்ளத்தி லுள்ளிநிற்கக்
காயாத காட்டங் கடிதேகுஞ் - சேயனாஞ்
செவ்வாயின் செவ்வேளைச் செவ்வேளைச் செப்பற்கே
யிவ்வாழ்வை யீந்தா யிசைந்து
சேயனாம் உனை நாளும் உள்ளத்தில் - சேயனாகிய உன்னை நாளும் மனத்தின் கண்
ஓயாது உள்ளி நிற்க - இடைவிடாமல் எண்ணி இருக்க
காயாத காட்டம் கடிது ஏகும் - தீராத காட்டங்களும் விரைவில் விலகும்
செவ்வாயின் செவ்வேளை - செவ்வாய்க் கிழமையாகிய செவ்வேளையில் , முருகனுக்கு உகந்த நாளில்
செவ்வேளை செப்பற்கே - செவ்வேளாகிய முருகனைப் பற்றிப் பாடுவதற்கே
இ வாழ்வை இசைந்து ஈந்தாய் - இக்கடினம் விரவிய வாழ்வையும் அவன் பெயரைச் சொல்லி உய்யும் பொருட்டு நமக்குக் கொடையாக அளித்தாய்
சேயனாகிய உன்னை நாளும் உள்ளத்தின் கண் உள்ளி நிற்கக் காயாத காட்டங்களும் விரைவாக விலகும் என்பது நிதரிசனம், அவ்வாறாக இருக்க முருகனுக்கு உகந்த நாளான செவ்வாய்க் கிழமையில் செவ்வேளாகிய அவனைப் பற்றி போற்றிப் பாடுவதற்கே இவ்வாழ்வை நமக்கு இசைந்து ஈந்தான் போலும். கடினங்கள் நிறைந்த உலக வாழ்வாய் இருந்தாலும், அவன் பெயரைச் சொல்லி உய்யும் வழியை நமக்களித்து அவனது கொடையாக நமக்கு இவ்வாழ்வை அளித்தனன் என்பது கருத்து.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக