சூதிற் றோற்றநல் லைவரின்
சோர்வ கற்றிய வார்சகன்
தூதிற் சென்றனன் மீள்கொளத்
தோற்ற விடங்களை யாயினும்
வாதிற் றீயவர் மாய்வுற
வாக்க ளித்தனன் சகிக்கவன்
யாது மறிந்தவன் சித்தமே
யடியர்க் கேற்றமென் றென்றுமே
சூதில் தோற்ற நல் ஐவரின் சோர்வு அகற்றிய ஆர் சகன் - சூதாட்டத்தில் தோற்ற நல்லவர்களான பஞ்ச பாண்டவர்களின் துயரத்தை அகற்றிய நிறைவான நண்பனான கண்ண பிரான்
தோற்ற இடங்களை மீள் கொள்ள தூதில் சென்றனன் ஆயினும் - அவர்தம் தோற்ற இடங்களை மீட்டுத் தரத் தூதுவனாகச் சென்றான் என்றாலும்
வாதில் தீயவர் மாய்வு உற சகிக்கு அவன் வாக்கு அளித்தனன்- போரில் தன் சகிக்குக் தீமை செய்த தீயவர்கள் மாயும் படி செய்வேன் என்று வாக்களித்தான் பாஞ்சாலிக்கு
யாதும் அறிந்தவன் சித்தமே அடியவருக்கு ஏற்றம் என்றென்றுமே - ஆகையால் நாம் என்ன நினைத்தாலும், இறுதியில் அனைத்தும் அறிந்த பகவானின் சித்தமே நிகழும் என்று உணர்ந்து தன் வாழ்வை இறைச் செயலாக நடுத்திகின்ற அடியாருக்கு அவ்வொப்படைப்பே ஏற்றம் என்க
பரமன் பல லீலைகளை செய்வான், அதன் நுணுக்கங்களை அவனே அறிவான், அதை அறிந்து கொண்டு சுய முனைப்புக் காட்டி வாழ்வதோடு அவனிடமே யாவையும் ஒப்படைத்து வாழ்வை நடத்துவதே அடியார்தமக்கு ஏற்றம் என்பதாம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக