சனி, 13 ஜூன், 2026

அன்பில் ஆழ்ந்த எழு சீர் மண்டிலம்

 அன்பி லாழ்ந்தமன மழகி லாட்படுமென் றவல மெண்ணுவது மேனடா 

என்பி லாதவுட லெங்கு மில்லையெனு முண்மை காணவரு மோவினா 

இன்பி னால்வருதன் மெய்யி னின்பமிலை யன்பி னோர்கிளைய தாகுமே

துன்ப மேவரினு மெந்த மாற்றமிலை யன்ப ணைத்ததனை யாளுமே 


மா கூவிள்ங்காய் மா கூவிள்ங்காய் 

மா கூவிள்ங்காய் கூவிளம்


அன்பில் ஆழ்ந்த மனம் - அன்பினை முழுதாக ஆழ்ந்து உணர்ந்த மனம் 

அழகில் ஆட்படும் என்று அவலம் எண்ணுவது ஏனடா- புறத் தொற்றத்து அழகினில் ஆட்பட்டு ஏமாறும் என்ற அவலத்தை எண்ணுவது ஏனோ?

என்பு இலாத உடல் - எலும்பு இல்லாத உடல் என்பது 

எங்கும் இல்லை எனும் உண்மை காண - எங்குமே இல்லை நடை முறையில் என்ற உண்மையைக் காண 

வருமோ வினா - அந்தக் கேள்வி எழுமோ?

இன்பினால் வருதல் மெய்யில் இன்பம் இல்லை - வெளித் தோற்றத்தின் மயக்கமுற்று இன்பம் என்னும் கருத்துக்கு வந்தால், அது உண்மையிலேயே இன்பம் என்று ஆகாது

அன்பின் ஓர் கிளை அது ஆகுமே - அது அன்பின் கீழ் இருக்கும் ஒரு சிறிய கிளை தான் என்று அறிக

துன்பமே வரினும் - துன்பமே வர நேரிட்டாலும் 

எந்த மாற்றம் இல்லை - எந்த மாற்றமுமும் இல்லை (அன்பு கொண்டாருக்கு)

அன்பு அணைத்து அதனை ஆளுமே - அத்துன்பத்தையும் அணைத்து ஆண்டுவிடும் பண்புடையது அன்பு 


   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அன்பில் ஆழ்ந்த எழு சீர் மண்டிலம்

 அன்பி லாழ்ந்தமன மழகி லாட்படுமென் றவல மெண்ணுவது மேனடா  என்பி லாதவுட லெங்கு மில்லையெனு முண்மை காணவரு மோவினா  இன்பி னால்வருதன் மெய்யி னின்பமில...