வியாழன், 18 ஜூன், 2026

தூயவள் (கோடை மழை) அறு சீர் மண்டிலம்

விளம் கருவிளம் கருவிளங்காய்

விளம் கருவிளம் கருவிளங்காய்  

தூயவ டிருவள ருரவழகன் 

     முகமென முகில்வரு திருவழகை 

நேயமொ டுயிரிகள் பெருமகிழ்வாய்க் 

      கானமொ டழைவிட நிலமகளின்

றாயுள மளிதர வடர்கடலைச் 

     சூலுறு தகைமையி னமைத்ததனாற்

றீயென வெரிகிற கதிரவனின் 

      சேயென வருகிற திருமைழையே

தூயவள் திரு வளர் உர அழகன் - தூயவளான திருமகள் வசிக்கும் மார்பழகனான திருமால்தன் 

முகம் என முகில் -  முகத்தை போன்ற மேகம்

வரு திரு அழகை - வானத்தில் உதித்து வரும் அழகைக் (கண்டு) 

நேயமொடு உயிர்கள் பெரு மகிழ்வாய் - அன்புடன் அனைத்து உயிரினங்களும் பெரும் மகிழ்ச்சியுடன்

கானமொடு அழைவிட- பாடல்கள் பாடி அழைப்பு விடுக்க 

நிலமகளின் தாய் உளம் - இப்பூமித் தாயின் அன்பு மிகுந்த உள்ளம் 

அளிதர- தனது பிள்ளைகளுக்கு அருளினை வழங்க 

அடர் கடலை - தனது அங்கமான அடர்ந்த இருக்கின்ற கடலை 

சூல் உறு தகைமையின் அமைத்ததனால் - சூலுறும் படி செழிப்பாக அமைத்த படியால் 

தீ என எரிகிற கதிரவனின் - தீயைப் போன்ற எரிக்கின்ற/எரிகின்ற கதிரவன் தன் 

சேய் என வருகிற திரு மழையே - குழந்தையாக வருகின்றாய் நீ மழையே


கோடைக்காலத்தில் மழையை எதிர்பார்த்து அனைத்து உயிர்களும் திருமாலைப் போன்ற நிறம் மற்றும் கொடுக்கும் குணம் கொண்ட முகிலினை வரவேற்கும். தாயுள்ளம் கொண்ட நிலமகள் தனது அங்கமான அடர்கடலை சூலுறுமாறு அமைத்த படியால், எரிக்கின்ற சூரியனுக்கும் குளிர்மை கொண்ட கடல் நீருக்கும் குழந்தையாக உதித்துக் குளிர்விக்கின்றது மழை.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மார்பிருந்து எழு சீர் மண்டிலம் (சந்தம்)

  மார்பி ருந்து மன்ன னுக்கு மங்க லங்க ளீபவள்  சார்பி ருந்து சீவ னுக்கு வீடு பேறு தருபவள்  போர்பு ரிந்து வெல்வ ளல்லள் புன்சி ரித்து வெல்பவ ணீ...