செவ்வாய், 28 ஜூலை, 2026

மூவாறு கண்களும் இன்னிசை வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

மூவாறு கண்களு முத்தமிழ் மெய்யாக

மூவீ ரிருதோளு முந்து தமிழுயிராய்ச்
சேவன் மயில்வேற் சிவமைந்தன் சேவைதர
மேவுவினை யாகாதோ வீண்

சனி, 25 ஜூலை, 2026

உரங்கமீது பள்ளி எழு சீர் விருத்தம்

உரங்கமீது பள்ளிகொண் டுறங்குமாதி தேவநின்

றரங்கம்வீசு மோதிமேற் றிரங்களாளு பாங்கினை 

யிரங்குமன்பின் வண்ணமா யிறங்கிவந்து பூதலத்

தரங்கமாளு நீர்மையை வரம்புரைத்த லாகுமே 

வாடுவார்படி அறு சீர் விருத்தம்(முற்றுமோனை)

வாடு வார்படி வாழ்வெலா 

     மாது மாயமே மாய்ந்திடா 

நேடு நேர்வழி நினைவிலா 

     நீங்க நேயமே நெஞ்சினிற்  

றேடு தீர்வுக டீர்விலை 

     தெள்ளித் தெளியவே திருவரு 

ணாட நல்வழி நல்குவா 

    ஞால நாகணை நாதனே 

வெள்ளி, 24 ஜூலை, 2026

மங்கை எழுசீர் விருத்தம் (சந்தம் முற்றுமோனை)

மங்கை மார்பகம் வாகு வாய்சுனை 

      வந்த வாதரும் வால்விழி 

செங்கை சீர்வளை தேடு சிற்றிடை 

      திங்க டேர்முகஞ் செவ்விதழ் 

தொங்கு தூகுழ றுஞ்சு சோர்வழி 

       தொய்வில் சுந்தரத் தோள்களுந்

தங்கு தாழ்மனஞ் சங்கு சக்கர 

     சார்ங்கன் றாளிணை சாருமே  

வியாழன், 23 ஜூலை, 2026

மன நிறை வனிதையின் அறு சீர் விருத்தம் (முற்றுமோனை)

 மனநிறை வனிதையின் மதுவதோ 

       மதிநிறை மகிழ்தரும் வடிவதோ 

தனநிறை தையலின் றழைவதோ 

      தனிப்பெருஞ் சார்விலி தமிழதோ 

நினைவொழி நெடுநிலை நெகிழ்வதோ 

      நிகரிலி நிலவொளி நீர்மையோ 

வினையொழி வேலவன் மிகையருண் 

      மிகைமொழி விளம்பினும் விந்தையே 

புதன், 22 ஜூலை, 2026

தேவை சிலவுள எழு சீர் மண்டிலம் (முற்றுமோனை)

 தேவை சிலவுள சிறுநசை சிலவுள 

       திருமணஞ் செயவிழை சேயிழையே 

நாவி னவின்றெழு நயந்திகழ் நாமமு 

       நழுவிடை நாயகி  ஞான்றுனதே 

மேவு மிளிரொளி மின்னிகர் விழிப்பொலி 

       விழைகணை விடைபெற விழவுறவே

சேவை செயவிழை செல்வனின் சேய்மையைத் 

        தீர்த்தொழி திருவளர் தேவதையே 

செவ்வாய், 21 ஜூலை, 2026

மன்னன் வருவான் மணவாளன் அறு சீர் மண்டிலம் முற்றுமோனை

தனது தலைவனான முருகனைப் பிரிந்த தலைவியின் கூற்று  

மன்னன் வருவான் மணவாளன் 

      மாலை மார்பன் வடிவேலன் 

தென்னன் றிருவாஞ் செந்தமிழின் 

       சிதையாச் சீராஞ் சிறுபாலன் 

நன்னெறி ஞானர் நசையாகு 

        நான்கு நவிலு நதிபாலன் 

என்னை யிணைய வென்றெண்ணி 

      யிமையா திழந்தே னிளமையையே 

திங்கள், 20 ஜூலை, 2026

நாகணை நாதன் முற்றுமோனை அறுசீர் விருத்தம்


நாகணை நாதன் ஞான்று 
     நல்லற ஞால நாட்டத்
தாக(ம்)தீர் தண்ணீர் தந்து 
    தாரணி தழைக்கச் சார்வா
மேக(ம்)தோய் விண்ணின் வீழ்ந்து 
    மெய்த்தவர் வீழ்வை வீழ்த்த
வாகுரு மலர்ந்து வைய 
    மாற்றலர் மாய்ப்பான் வந்தே

செவ்வாய், 14 ஜூலை, 2026

மாலின் மருகோனே (செவ்வாயிற் செவ்வேள்)

 மாலின் மருகோனே குறவள்ளி மணவாளா

வானின் குலமீள மலைசாடு கதிர்வேலா
கோல மயிலேறு குணநேரி லுமைபாலா
கூறு மடியார்கள் குறைதீர்க்கு முயிர்நேயா
ஞால மகிழ்வாழக் கொடுசூரன் குலகாலா
ஞான வுரைகூறு சிவமோன குருநாதா
மாலி லுழன்றாடு மடியேனைக் கரைசேர்வா

வான ருயர்மாதின் மனமாளு பதிசீலா

ஞாயிறு, 12 ஜூலை, 2026

போர் நடத்த சந்த விருத்தம் (பார்த்தசாரதி)

போர்நடத்த வாயுதங்க டேவையில்லை புன்னகை 

சீர்நடத்து கீதைசொன்ன தேவதேவ னாயினும்

தேர்நடத்து பாகனாய்த் திறந்தமேனி புண்களைப்

பார்நடத்த வின்றுமேந்து கேணியாளு பரமனே 

வியாழன், 9 ஜூலை, 2026

சென்றுதித்து நரசிம்மார் விருத்தம்

 சென்றுதித்துத் தூணிலே சிறுவன்வாழப் பண்டுநாள் 

வென்றவேந்த கந்தையை யுகிர்த்தெறிந்து வந்தனை 

யன்றுதோன்றி யன்றளிக்கு மாளரிக்கு மேலொரு 

வின்றுமன்று மென்றுங்கூற வீரமாளு தேவெதோ 

புதன், 8 ஜூலை, 2026

அழகே அறுசீர் மண்டிலம்

அழகே யழுக்கா றுறுமழகே 

      அடியா லளந்தாய் மூவுலகை 

கழுகே யதன்மீ தெழுமரசே 

      கரியி னிடர்தீர்த் தருடேவே 

தொழுகே னுனைநீங் கொருவருமே 

        சுடரா ழிசங்கா முழுமுதல்வா  

பழுதாம் வினைநீங் குயர்வுறவே 

      பகர்வேன் பெயரா யிரமுனதே 

செம்பாகம் செவ்வயிற் செவ்வேள்

 செம்பாக நங்கைக்குத் தந்தாரின் றீவிழியி

னம்பா லுதித்த வழகுருவே - கொம்பார்
குறமக ணாதா குகாகுமரா வென்பார்க்
கறமுகனா யாள்வா யருள்

மார்பிருந்து எழு சீர் மண்டிலம் (சந்தம்)

  மார்பி ருந்து மன்ன னுக்கு மங்க லங்க ளீபவள்  சார்பி ருந்து சீவ னுக்கு வீடு பேறு தருபவள்  போர்பு ரிந்து வெல்வ ளல்லள் புன்சி ரித்து வெல்பவ ணீ...