சனி, 25 ஜூலை, 2026

உரங்கமீது பள்ளி எழு சீர் விருத்தம்

உரங்கமீது பள்ளிகொண் டுறங்குமாதி தேவநின்

றரங்கம்வீசு மோதிமேற் றிரங்களாளு பாங்கினை 

யிரங்குமன்பின் வண்ணமா யிறங்கிவந்து பூதலத்

தரங்கமாளு நீர்மையை வரம்புரைத்த லாகுமே 




உரங்கம் மீது பள்ளி கொண்டு - ஆதி சேடனார் என்னும் பாம்பின் மீது பள்ளி கொண்டு 

உறங்கும் ஆதி தேவ - யோக நித்திரை கொள்ளும் யாவற்றிற்கும் ஆதியான முழுமுதலே 

தரங்கம் வீசும் ஓதி மேல் - அலைகள் வீசும் கடலின் மேல்

திரங்கள் ஆளு பாங்கினை - நிலையாக நிற்கும் பாங்கை 

இரங்கும் அன்பின் வண்ணமாய் - இரக்க குணம் மிகுதியாகக் கொண்டவனாய் 

இறங்கி வந்து பூதலத்து - இப்பூவுலகில் அவதரித்து 

அரங்கம் ஆளும் நின் நீர்மையை- திருவரங்கம் என்னும் பதியில் குடுகொண்டு ஆட்சி செய்யும் நினது கருணையை 

வரம்பு உரைத்தல் ஆகுமே- ஒரு எல்லைக்குள் அடைக்க முடியுமா என்ன? முடியாது என்பதாம் 

திருமால் ஆதி சேடன் மேல் பள்ளிகொண்டு இருந்த போதிலும், உயிர்கள் மீதுள்ள அளவற்ற கருணையினால் தான் எவ்வாறு பாற்கடலில் அலையின் சலசலப்பு இருந்தாலும் அந்தத் தாக்கத்திற்கு ஆட்படாமல் யோக நித்திரையில் உள்ளாரோ அதே போன்று இன்பம் துன்பம் என்ற இருமைத் தத்துவமாக உள்ள முன்னும் பின்னும் செல்லும் அலையின் தாக்கத்தில் ஆட்படும் உயிர்களின் இவ்வாழ்க்கை என்னும் கடலில் எவ்வாறு நிலையாக நிற்பது என்று காட்ட வேண்டி இப்பூவலிகின் வைகுந்தம் என்று கருத்தப் படுகின்ற திருவரங்கம் என்னும் பதியில் அவதரித்து ஆளுகின்ற நீர்மையை சொற்களின் எல்லைக்குள் கொண்டு வர இயலுமோ? இயலாது என்பதாம் 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துண்ட வெண் பிறையன் கலித்துறை

துண்ட வெண்பிறை யன்றுயர் தீர்த்தவ னென்று மண்ட மண்ணுல கந்தனைக் காப்பவ னாசை கொண்ட பெண்ணுயிர் கண்மனத் தேற்பவன் கோலங் கண்ட வந்நொடி யேகவி கள்பிற...