அம்மான் கொண்டா ரிருமாதர்
பெம்மான் கொண்டா ரணியாறு
செம்மான் மகளைக் களவுகந்து தினைக்கான் றிரிந்தா ரெம்மானுந்
தம்மா னத்தைக் காத்ததற்குத்
தம்மா னீந்தார் வானவர்கோ
னம்மான் மயக்க மறுப்பதற்கே
யெம்மான் கொண்ட வணியாறே
அம்மான் கொண்டார் இருமாதர் - மாமனாகிய திருமால் திருமகள் மண்மகள் என இரு மாதர்களைக் கொண்டார்
பெம்மான் கொண்டார் அணி ஆறு - அத்தனாகிய சிவபெருமான் அழகிய ஆறான கங்கையைத் தன்னகத்தே கொண்டார்
செம்மான் மகளை களவு உகந்து - செம்மானாகிய இலக்குமியின் மகளான வள்ளியம்மையைக் களவின் உகந்து
எம்மானு உம் தினை கான் திரிந்தார் - எமது தலைவனும் தனது மாமனைப் போன்று மெனக்கெட்டு (பூமா தேவியை மீட்கத் திருமால் முயன்று கடலினின்று பூமியை மீட்டார்) தனது காதலுக்காகப் பயணப் பட்டார்
தம் மானத்தை காத்ததற்கு - தனது மானத்தைக் காத்ததற்காக
வானவர் கோன் தம் மான் ஈந்தார் - மான் போன்ற அழகிய தம் மகளான தெய்வானையை இந்திரன் மணமுடித்து வைத்தார் (எம் தலைவனான முருகப் பிரானுக்கு)
நம் மால் மயக்கம் அறுப்பதற்கே- நாம் மாயையின் உழன்று மயங்குகிறோம் அதனின்று நாம் விடிவு பெற வேண்டும் என்பதற்காகவே
எம் மான் கொண்ட அணி ஆறே - எமது தலைவரான முருகப் பெருமான் ஆறு படை வீடு கொண்டு அருள் பாலிக்கின்றார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக