ஞாயிறு, 6 செப்டம்பர், 2026

விடியல் ஒளியா பன்னிரு சீர் விருத்தம் (ஸ்ரீ ஜெயந்தி)

 விடிய லொளியா நள்ளிரவிற் 

      சிறையின் மிளிர்ந்த செல்வனவன் 

           விதியை முடிக்க மாமனுக்கு 

                விளைந்தா னெட்டாம் பிள்ளையென 

நொடியின் மயக்கம் வரவழைத்து 

      நுடங்கச் சிறைக்காப் பாளர்க 

         ணோவா நதியைக் கடந்தான்பி 

               னாயர்ப்  பாடி நுழைந்திட்டு 

வடிவத் தழகின் கோபியரை 

        வசியஞ் செய்த மதிவதனன் 

           வாதின் மதியின் கூர்மையினால் 

                 வைய மீட்டா னைவர்க்குக்

கொடியோ ரழித்து நல்லாரின் 

       குலங்காத் தருளுச் சூளுரைத்தான் 

           குறைதீர்த் தருள வருமிந்நாள் 

                குழகன் பிறந்த வெட்டாமே


நள் இரவில் விடியல் ஒளியா - நடு இரவில் விடியல் ஒளியாக 

சிறையில் மிளிர்ந்த செல்வன் அவன் - சிறையில் தேவகிக்கும் வசுதேவனுக்கும் சீர் அளிக்கப் பிரகாசிக்கும் பிள்ளையாய் உதித்தான் 

மாமனுக்கு விதியை முடிக்க - மாமனான கஞ்சனுக்கு அவனது விதியை முடிக்கும் கூற்றுவனாக 

எட்டாம் பிள்ளை என விளைந்தான் - எட்டாவது பிள்ளையாக அவதரித்தான் 

மயக்கம் நொடியில் வர அழைத்து - சிறையில் உள்ள அனைவரும் மயங்கும் படியாகச் செய்து 

சிறை காப்பாளர்கள் நுடங்க - சிறைகாப்பாளர்கள் நுடங்குமாறு 

நோவா நதியை கடந்தான் - வசுதேவர் தூக்கிச் செல்ல யமுனை நதியை நோவாது அவ்விரவு கடக்கும் படி அருள் செய்தான் 

பின் ஆயர்ப்பாடி நுழைந்திட்டு - பின்பு ஆயர்ப்பாடிக்கண் புகுந்தான் நந்தகோபன் , அசோதைக்கு மகனாக வளர்ந்தான் 

வடவத்து அழகின் கோபியரை - தனது ஒப்பற்ற வடிவத்து அழகினால் கோபியர்களை 

வசியம் செய்த மதி வதனன் - வசியம் செய்த வாறு தன் பின் பித்தராகத் திரிய வைத்த நிலவு போன்ற முகத்துடையவன் 

மதியின் கூர்மையினால் வாதில் - தனது புத்தி கூர்மையினால் மாபாரதப் போரில் 

ஐவர்க்கு வையம் மீட்டன் - பாண்டவர்களுக்குத் தனது நாட்டை(உலகை) மீட்டுக் கொடுத்தான் 

கொடியோர் அழித்து - கொடியவர்களை அழித்து 

நல்லார் குலம் காத்து அருள சூள் உரைத்தன் - நல்லவர்களின் குலத்தைக் காத்து அருளுமாறு அனைத்து யுகங்களிலும் அவதரிப்பேன் என்று சூள் உரைத்தவனான கண்ண பிரான் 



குறை தீர்த்து அருள வரும் இந் நாள் - அன்பர்களின் குறையைத் தீர்த்து அருளும் நாளான ஸ்ரீ ஜெயந்தி 

குழகன் பிறந்த எட்டாமே - குழந்தை அழகனான கண்னன் பிறந்த அஷ்டமி திதியாம் 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விடியல் ஒளியா பன்னிரு சீர் விருத்தம் (ஸ்ரீ ஜெயந்தி)

  விடிய லொளியா நள்ளிரவிற்        சிறையின் மிளிர்ந்த செல்வனவன்             விதியை முடிக்க மாமனுக்கு                  விளைந்தா னெட்டாம் பிள்ளை...