எழிலமுதா சித்தர்தலைவா வெம்மீசா
விணையிலதோர் வேலேந்து போர்வீரா
குழலினிதே மணம்வீசு மலைமகளின்
குணபாலா மயிலேறு குகநேயா
வழுவறியாத் திருமாறன் மருகோனே
மடமகளா ரிருபுறமும் புடைசூழ
விழவுகந்த தணிகேசா வெமையாள்வா
தொழுமடியார் குறைதீர்க்கும் பெருமாளே
எழில் அமுதா - அமுதம் போன்ற அழிவில்லாத அழகுடையவனே
சித்தர் தலைவா- சித்தர்களின் தலைவனே
எம் ஈசா - எமது கடவுளே
இணை இலது ஓர் வேல் ஏந்து போர் வீரா - ஒப்பற்ற வேலாயுதத்தை ஏந்தும் போர் வீரனே
குழல் இனிதே மணம் வீசும் மலைமகளின் குண பாலா - நறுமணம் வீசும் கூந்தலை உடைய மலைமகளான பார்வதி தேவியின் குணம் பொருந்திய குமாரனே
மயில் ஏறு குக - மயில் ஏறும் குகப் பெருமானே
நேயா- மிக்க அன்பு கொண்டவனே
வழுவு அறியா திருமால் தன் மருகோனே - குற்றமற்ற திருமால் தன் மருகனே
மடமகளார் இரு புறமும் புடைசூழ - தெய்வானை மற்றும் வள்ளி ஆகிய தேவிமார்கள் இரு புறமும் சூழ்ந்து இருக்கும் படியாக
விழவு உகந்த தணிகேசா - விழாவை உகந்த தணிகாசலத்தின் ஈசனே
தொழும் அடியார் குறை தீர்க்கும் பெருமாளே - உன்னையே நம்பித் தொழுதேத்தும் அடியார்களின் குறைகளைத் தீர்க்கும் பெருமாளே
எமை அள் வா- எம்மையும் வந்து ஆள்வாயாக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக