தந்தந் தனதன தந்தந் தனதன
தந்தந் தனதன தந்தந் தனதன தனதானா
கொற்றந் தவறிய பத்துத் தலையனை
ஒற்றைக் கணையினிற் செற்றுச் சாய்த்தவன் மருகோனே
தொண்டுக் கிரகமுந் தொண்டே புரிந்திடுங்
கண்டுத் தொழுதிடுந் தண்டை யணிந்தவ னிருதாளே
கற்றத் தமிழினி லெட்டு மறிவரை
முக்கட் பரமரி னெற்றிப் புதல்வனைப் புனைவேனே
உன்னை யுணர்ந்திட ஏழு நிலைகளைத்
தன்னை அறிந்திடும் யோகம் புரிபவர் முனைவாரே
நற்ற வநாடா நாலுந் தெரியா
குற்றத் துறைவனை நிட்டை கதிகொள அருளாயே
துட்டர்ப் படையினை வட்டக் கடல்மிசை
யிட்டுக் கலிகொளு மிட்ட வறுபடை யதிதீரா
கற்பிற் சிறந்தவள் வெற்புத் தலைவனின்
சிற்பப் புதல்வியா மையை அருணிறை அயிலோனே
பஞ்சக் கரமுள வஞ்சிக் களவினிற்
றம்பிக் குதவிய தந்திக் கிளையினைத் தொழுவேனே
சீர் பிரித்து :-
கொற்றம் தவறிய பத்துத் தலையனை ஒற்றை கணையினில் செற்றுச் சாய்த்தவன் மருகோனே
தொண்டுக் கிரகுமும் தொண்டே புரிந்திடும் கண்டுத் தொழுதிடும் தண்டை அணிந்தவன் இரு தாளே
கற்றத் தமிழினில் எட்டும் அறி வரை முக்கண் பரமரின் நெற்றிப் புதல்வனை புனைவேனே
உன்னை அறிந்திட ஏழு நிலைகளைத் தன்னை அறிந்திடும் யோகம் புரிபவர் முனைவாரே
நற்றவம் நாடா நாலும் தெரிய குற்றத்து உறைவனை நிட்டை கதிகொள அருளாயே
துட்டர்ப் படையினை வட்டக் கடல்மிசை இட்டுக் கலி கொளும் இட்ட அறுபடை அதிதீரா
கற்பில் சிறந்தவள் வெற்புத் தலைவனின் சிற்பப் புதல்வியாம் ஐயை அருள் நிறை அயிலோனே
பஞ்சக் கரம் உள வஞ்சிக் களவினில் தம்பிக்கு உதவிய தந்திக்கு இளையினைத் தொழுவேனே
எண்ணலங்காரம் என்ற அமைப்பில் ஒன்றிலிருந்து பத்து வரை உள்ள எண்கள்
பாடலில் அமையப்பெற்றது
10,1
9,2
8,3
7,4
6,5
5
இந்த வரிசையில் பாடலில் எண்கள் அமைந்துள்ளன
தொண்டு- ஒன்பது
ஏழு நிலைகள்- ஏழு சக்கரங்கள் / ஆதாரங்கள்
ஐயை - பார்வதி ( ஐயன் எனும் சொல்லின் பெண்பால்)
துட்ட - துஷ்ட
இட்ட - இஷ்ட
வஞ்சி - வள்ளி , களவு ( அவரை விநாயகரின் தம்பியான முருகன் களவு மணம் புரிந்த நிகழ்வு)
தந்திக்கு இளை = யானைக்கு இளையவனான
வெற்புத் தலைவன் - மலை அரசனான இமவான்
பங்குனி உத்திர நாளன்று அமைந்த எண்ணலங்காரப் பாடல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக