சிரமொன்று மேறானைச் சிற்பி சிரம்தாழ்ந் துளமுருகிச்
சிரமொன்று மேறானைச் சிற்பி வணங்கச் சிரம்பணிந்து
சிரமொன்று மேறானை சிற்பி ரபஞ்சச் சிலைவடிவாய்ச்
சிரமொன்று மேறானை சிற்பி செதுக்கத் திகைப்புறவே
#கட்டளைக்கலித்துறை
சிரம் ஒன்றும் ஏறானைச் சிற்பி சிரம் தாழ்ந்து உளமுருகிச்
சிரம் ஒன்றும் ஏறானைச் சிற்பி வணங்கச் சிரம் பணிந்து
சிரம் ஒன்றும் ஏறு ஆனை சிற் பிரபஞ்சச் சிலைவடிவாய்ச்
சிரம் ஒன்றும் ஏறு ஆனை சிற்பி செதுக்கத் திகைப்பு உ றவே
சிரம் ஒன்றும் ஏறான் - சிவ பெருமானைச் ( தலைமை கொள்ளும் ஒப்பற்ற காளையை வாகனமாக கொண்டவன்) சிற்பி சிரம் தாழ்த்தி உளமுருகிச்
சிரம் ஒன்றும் ஏறான் - நாராயணன் ( ஏறு என்பதை சிங்கம் என்ற பொருளில் கொண்டு , சிம்ஹ தலையை கொண்ட உயர்ந்தவனை - நரசிம்மனை) வணங்கிச் அச்சிற்பி சிரம்பணிந்து
சிரம் ஒன்றும் ஏறு ஆனை - சிரம் நெடுங்காலம் விளங்கக் கூடிய கலை வடிவில் காளையையும் யானையையும் அச்சிற்பி சிற் பிரபஞ்ச வடிவில் (microcosm) - நமது பார்வைக்கேற்ற படி நாம் காணும் காட்சி தெரிவது போல செதுக்கிய சிலையை
சிரம் ஒன்றும் ஏறு ஆனை- ஒரு புறம் பார்த்தால் காளையாக மற்றோரு புறம் பார்த்தால் அதே தலை ஆனையாக தெரிவது திகைப்பூட்டும் வண்ணமாக உள்ளதே
9.
வேழ முகத்தானை விண்ணோ ரமுதொளித் தானைபய
வாழி படுத்தானி னாழி யெடுத்துகந் தானைபெரும்
பேழை வயிற்றானைப் ரீதியா லிக்குகந் தானையுறு
தோழி யணையானை யாயரு டந்தானை யுள்ளுவனே
10.
திருடரும் நாமந் துதித்து கவிபல சீர்புனையக்
குருடரும் பார்க்கக் குருவையும் உன்னையும் கூர்விழியாற்
குருடரும் தாங்கும் கடவுளே உன்றன் கடைவிழியால்
அருடரும் காலம் அணைய எதுவரி தன்பருக்கே
11.
சீர்காழிப் பிள்ளையார் சேயோன் அவதாரம் என்றுரைத்து
சீர்காழிப் பிள்ளையார் சித்திர பாப்போல் தனக்கருளச்
சீர்,காழி பிள்ளையார் தம்பியை வேண்டி யருணைமுனி
சீர்காழிப் பிள்ளையார் சீர்த்தி உரைத்த திருப்புகழே
12.
ஐந்து சிரத்தவ ஐந்தக் கரத்தவ மைந்தனுனக்
கைந்து கரத்தவ னாறு முகனும் வடமொழியும்
பைந்த மிழுமுன் துடியி னொலிகட் பணியணியும்
நைந்தொ ளிருங்கூன் மதியும் நதிசூடு நாயகனே
13.
ஓதிய கல்வியும் உன்பெயர் சொல்ல ஒருமனதாய்
வேதியர் வேள்வியும் உன்னடி பேணும் வினைசெயலாய்
போதிய சொல்வளம் போற்றும் புலவர் புனைகவியுஞ்
சோதிய கல்விழி சேந்த வுனதருள் சேர்ந்திடவே
14.
வெண்டா மரையமர் வாளை கரமீரால் வீணைமீட்டும்
பண்டோ துமறை பகரேடு மாலை படைத்தவளைத்
திண்டா டுமுலகந் தெய்வத் திருவருட் டேர்ந்துபெற
விண்டேத் துவதை வினையாய்ப் பயில்வோம் வகைவகையே
15.
துரங்கத் திரிவி னுணுக்கத்தை வேதாந்த தேசிகன்ச
துரங்கத் தரங்கிற் றுதிக்குட் கரந்துத் துணிந்தகவி
குரங்கிற் கரசன் குலைய மறைந்து கணைதொடுத்த
அரங்கத் தரச னணிபா துகைபோற்று மாயிரமே
16.
ஆணிற் சிறந்தோன் அணிநெற்றித் தோன்று மழகுருவே
நாணல் வனத்தினி னங்கை யறுவர் நயந்தளித்த
ஊணில் வளர்ந்த உமையிள பாலா உனையொருனாள்
காணக் கிடைக்கக் கருணை புரிவாய் குருகுகனே
17.
பஞ்சா யுதத்துதி பண்ணா லிசைத்து படையணியாய்
நெஞ்சா முடனமர் நீங்காத் திருவுடை நீள்விசும்பும்
பஞ்சா மடியளப் பாலன் துணைவரும் பாங்குடைய
துஞ்சா தடியவர் சூழரண் மேற்செய்தாய்த் தோத்திரமே
18.
தன்னாவை மாலைத் தவிர்த்து விலகாத் தகைமைசெய்த
தன்னாவை மாலை தமதுயிர் கோக்குச் சமர்ப்பணமாய்த்
தன்னாவை மாலை புனைந்த சடகோபன் தண்டமிழ்ச்சீர்
தன்னாவை மாலை யகற்ற உதித்த தனிப்பொருளே
தன் ஆ (பாதை) ஐ(தலைவன்) மாலைத் (திருமாலைத் )தவிர்த்து விலகாத் தகைமைசெய்த
தன் ஆவை (உயிரை) மாலை(யாய்) தமது உயிர் கோக்கு ( தலைவற்கு) சமர்ப்பணமாய் (அளித்த)
தன் நா (வால்) ஐ (அழகு) மாலை ( யாய்) புனைந்த சடகோபன் தண்டமிழ் சீர் (ஆன)
தன் நா ( சொல்லால்) வை ( உலகத்தின்) மாலை ( இருளை) அகற்ற உதித்த தனிப் பொருளே
19.
மலைவில்லா வாழி மதிகதி ராம வனிப்பதிக்கே
மலைவில்லா வாழி மதிகதி ராம வனிப்பதிக்கே
மலைவில்லா வாழி மதிகதி ராம வனிப்பதிக்கே
மலைவில்லா வாழி மதிகதி ராம வனிப்பதிக்கே
20.
ஆயிரம் நாம முடையோன் அளவிலா ஆன்றபுகழ்
ஆயிரம் பாவால் உரைசெய்த ஆழ்வார் அருள்பரவ
ஆயிரம் நாவுடை ஆதி யரவ கிலமிறங்க
ஆயிரம் ஆயிரம் ஆண்டு தகுமோ அவரேத்தவே
21.
பிறவா வரம்தரும் பேர ருளாளன் பெருமைதனை
மறவா நிதம்போற்றும் மாமு னிகளின் மலர்பதங்கள்
உறவா மவர்க்கென்றும் ஓத வனாமம் ஒருமனதாய்
உறுவா ரனைத்தின்பம் உள்ளும் புறமும் உணர்ந்துணர்ந்தே
22.
சிறிய பெரிய திருவடி தாங்குந் திருவடியைச்
சிறிய கரங்கட் சிரம்பணிந் தேத்துஞ் சிறுவனவன்
அறிய வரிய வரியா யரியை யரிந்துவந்த
செறிய வருளுந் திரும டியமருஞ் சேவையிதே
23.
முகமா றுடையான் நுதற்கண் புதல்வன் முருகுருவ
முகமா றுடையான் மொழியான் மொழிய உளத்தமர்ந்து
முகமா றுடையான் முதற்கண் தொழுது வினையகற்றி
முகமா றுடையான் மருகன் புகழை உரமளியே
24.
பிரம முறையாப் பொருளு முளதோ படைப்பிலென
பிரம முறையாப் பிறங்கித் தெளியப் பிணியறுக்கும்
பிரம முறையா றுமுகப் பரமன் பிடித்துறையும்
பிரம முறையா யனுதின மேத்தும் பரங்கிரியே
25.
பரம பதம்பயின் றேத்த பரம னருட்புரிய
பரம பதம்நவின் றேத்த பரம னருட்புகழைப்
பரம பதம்வியந் தேத்து முனிவன் பகர்ந்ததிரு
பரம பதமான செந்திற் புகழைப் பணிகுவனே
26.
பணியா றுதலைப் புனைந்த பெருமான் பழம்பெறவிப்
பணியா றுதலைப் புதல்வன் புவிவலம் பாழ்பிதாமா
பணியா றுதலைப் புதல்வன் பழம்பெற பாலதண்டன்
பணியா றுதலைப் பயிலப் பழனிசெற் பார்வதியே
27.
பார்வை யளக்கும் பரமன் புதல்வன் பணியாததாற்
பார்வை யளித்து பரமன் புதல்வன் பிணையமர்த்த
பார்வை யெரித்த பரமன் புதல்வன் மடியமர்ந்து
பார்வை உரைத்த பரமன் புதல்வனா வேரகனே
28.
வேட வுரிதரி மின்னேர் விடையான் விசயற்கன
வேட வுரிதரி மின்னேர் வினைவாழ் வுழலுமாக்கு
வேட வுரிதரி மின்னேர் திருத்தணி வெற்புறையும்
வேட வுரிதரி மின்னேர் கொடிபுணர் வேலவனே
29.
வேலாச்சி வைய விளையன் வருடைகண் மேய்த்தருளும்
வேலாச்சி வைய றிவின்மீ தகந்தையை விட்டொழிய
வேலாட்சி வைய ருணிறை புதல்வன் விளையாடினன்
வேலாட்சி வைய மருளும் பழமுதிர்ச் சோலையனே
30.
சோலை மலையா துயர்தீர்க் குடையாஞ் சிறுவிரற்கச்
சோலை மலையா னிருமக ணோற்றுத் துணைவனென்றச்
சோலை மலையா ளருட்கும ரன்சேரச் சூதமிகச்
சோலை மலையா ளமங்க ளமாஞ்சுப் பிரமணியே
31.
சிவாய நமவெனச் செப்பு மடியார் சிரம்பணிந்து
திவாக ரனைத்தேர்த் திகிரியாய்க் கொண்டோன் றிருப்புகழை
விவாதந் தவிர்த்து வினைதீர்த் தடங்க விடைவிடாம
லவாவறுத் தோத வடைவா யரனி னடைக்கலமே
32.
மூன்றை இரண்டாக்கும் முக்கண்ணன் பார்வை உமைமுலைகள்
மூன்றை எரிசெய்யும் முக்கண்ணன் பார்வை விசும்பதனில்
மூன்றைத் தொலைத்தார்க்கு முக்கண்ணன் பார்வை முழுதுபெறும்
மூன்றைச் சிறந்தாக்கும் முக்கண்ணன் பார்வை நலங்களுமே
33.
புனலும் கனலும் புவியும் விசும்பும் பவனமவன்
மனமும் நினைவும் மலரும் அறிவும் அவனதுவே
இனமும் மொழியும் இசையும் இமையோர் இறைவனதே
தினமும் தொழுவோம் திசையை விளக்கும் திருவடியே
34.
கரியவன் மாலைக் கணத்தி லரவாங் களிங்கனெனுங்
கரியவன் மாலைக் கணத்தி னடித்து கழற்பதித்திக்
கரியவன் மாலைக் கணத்தி னியர்காத லாலணைத்த
கரியவன் மாலைக் கணத்தி னினைப்போங் கதிபெறவே
35.
மாறான் புகுந்த மடநெஞ்சில் வேறான் குடிபுகுமோ
மாறான் புகுந்த மடநெஞ்சில் வேறான் குடிபுகுமே
வேறான் புகுந்த மடநெஞ்சில் மாறான் குடிபுகுமோ
வேறான் புகுந்த மடநெஞ்சில் மாறான் குடிபுகுமே
36.
மும்முலை நாயகி முக்கண் முதல்வ னொருபுறத்தாள்
அம்மலை நாயகன் அன்பாய் வளர்த்த அரும்புதல்வி
நம்மலை நாயகன் ஞான வடிவேலற் கன்னையானச்
செம்மறை நாயகி சீர்தாள் பணிவோம் சிறப்புறவே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக