வியாழன், 25 ஜனவரி, 2024

மாலாஞ்சனேயர் சிலேடை வெண்பா

வேதமுறை யாதியவன் றூதனுமாய் பாதமுமாய்
கோதிலுரை போதனைசெய் மேதினியிற் - போதமர்வாள்
ஆழிபெற வாழிகடந் தூழியென பாழடைய
நாழியினி லாழிசூழுந் தீவு  

#வெண்பா  

அபயவரத ஆஞ்சநேயர் திருக்கோயில்: - Vastushastram

திருமாலுக்கும் ஆஞ்சநேயருக்குஞ்  சிலேடையாக

வேதமுறை ஆதியவன் தூதனுமாய் பாதமுமாய்
கோதிலுரை போதனை செய் மேதினியில் போதமர்வாள்
ஆழி பெற வாழி கடந்து ஊழி என பாழடைய
நாழியினில் ஆழி சூழ் தீவு

திருமால்

வேதமுறை ஆதி அவன் தூதனுமாய் ( தூதனும் ஆனவன் பாண்டவர்க்கு) மேதினியில் போதனைசெய் கோதிலுரை ( குற்றமற்ற உலக நீதியான பகவத் கீதை) பாதமும் ஆய் (அச்செயுள்ளின்) அடியாகவும் இருக்கிறான் . போதில் அமர்பவளான மஹாலக்ஷ்மி , அவளை ஆழி பெற வாழி (கடலைக் கடையும்போது   பெற்று தனது தாரமாக்கி வாழ்பவன்) கடந்து ஊழி என ( பல்லூழிகள் கடந்தும் வாழ்பவன்) ஆழி சூழ் தீவான இலங்கை சட்டென்று ( நாழியினில்) பாழடைய காரணமாய் இருந்தவன்


வேதமுறை ஆதி, அவன் தூதனுமாய் பாதமுமாய்
கோதிலுரை போதனை செய் மேதினியில் போதமர்வாள்
ஆழி பெற ஆழி கடந்து ஊழி என பாழடைய
நாழியினில் ஆழி சூழ் தீவு

ஹனுமான்

வேதமுறை ஆதியான (ஸ்ரீமன் நாராயணன்) அவன் தூதனுமாய் ( ஸ்ரீராமனின் தூதன்) பாதமுமாய் (அவனது சிறிய திருவடியாகி) கோதில் உரை  போதனை செய் மேதினியில் (இன்றளவும் இப்புவியில் இருந்து குற்றமற்ற காவியமான இராமாயணத்தை ஓதிக் கொண்டிருப்பவன்)
போதில் அமர்பவளான இலக்குமி - இங்கு சீதை , அவளிடம் கணையாழியைப் பெற ஆழி கடந்து (கடலைக் கடந்து) ஊழி என ( ஊழி போல தீ வைத்தான்) நாழினில் (விரைவில்) ஆழி சூழ் தீவான இலங்கை பாழடையவே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தோட்டை கட்டளைக் கலித்துறை

தோட்டை மதியாக்கித் தொண்டனைக் காப்பாள் துணையிருந்தாற் கூட்டைத் திருவாழுங் கோவிலா யாக்கலாங் கூற்றவனின் ஏட்டை யழித்தாண் டிளமை நிலைக்கும் வழியடை...