மேலவா வாலவா வாலவா வாலமே
நாலவா வாழவா வாழவா வாலநா
நீலவா வாளவா வாளவா வாலநீ
காலவா வேழவா வாழவே வாலகா
மாலைமாற்று கலிவிருத்தம்
1.திருமால்
வாலவா மேலவா ( வாலிபம் நிலைக்குமென்ற ஆசை) ஆலவா ( விஷத்தின் மீதுள்ள ஆசையை போலவன்றோ) ஆலமே ( அனைத்து உயிர்க்கும் தோற்றமாய் ஆலம் விழுதைப் போன்றவனே
நாலவா ( நான்கு வேதத்தின் மீது அவாவில் நான்) ஆழ வா ( ஆழ்ந்திருக்கவா ) அதற்கு நீ எனது நாவினில் வாழ வா வால ( இளமை குன்றாதவனே )
நீலவா ( கருமை நிறுத்தவனே ) வாளவா ( ஒளி வடிவானவனே ) ஆளவா ( என்னை) வால ( என்றும் இளையோய் ) நீ
காலவா ( காலத்தின் மீது முழு ஆளுமை கொண்டவனே) ஏழவா வாழவே ( ஏழு பிறவியிலும்) எனது ஆசை ( உன்மீது) வாழவே ( உயிர்ப்புடன் இருக்க) ஆல கா ( ஆலின் இலையாய் என்னைக் காப்பாயாக )
2. சிவன்
மேலவா ( மேன்மையான அவா) என்பதென்ன வாலவா ?( இளமையின் மீது மோகமா) ஆலவா ( விஷத்தை விழுங்கியவனே ) ஆலமே ( அனைத்துயிர்க்கும் ஆதியே
நாலவா ஆழவா ( இவ்வுலகத்திலுள்ள பல ஆசைகளில் நான் மூழ்கலாமோ? ) கூடாது அதனால் நீ என்னில் வாழவா நன்மைகளை நல்குவாய்
நீலவா ( நீல கண்டத்தை உடையவனே) வாளவா ( ஒளிச்சுடரே) ஆளவா ( என்னை) வாலநீ ( வாலையை ஒரு பாகமாக கொண்ட நீ)
காலவா ( கால பைரவனானவனே ) வேழவா ( ஆனை உரி தரித்தவனே ) வாழவே ( என்னை)
ஆல ( அனைத்துயிர்க்கும் வித்தே) காப்பாயாக
3. முருகன்
மேலவா ( மேன்மையானவனே ) வாலவா ( இளமை குன்றாதவனே) ஆலவா ( மதுரையில் / பழமுதிர்ச்சோலை அல்லது பரங்குன்றில் உறைவோனே) ஆலமே ( ஆலம் போல அனைத்துயிர்க்கும் வித்தே)
நாலவா ( வேத சொரூபியே) ஆழவா ( ஆழ் மனதின் அவா என்னவென்றால் ) - எனது ; வால (இளயோய்) நா வாழவா ( என் மொழியில் நீ வாழவா) - உன்னையே துதிக்குமாறு செந்தமிழ் ஞானம் வழங்கு
நீலவா ( நீல மயிலை வாகனமாய்க் கொண்டவனே ) வாளவா ( ஒளிச்சுடரே) ஆளவா ( என்னை ) வால நீ (என்றும் இளையோய் )
வேழ ஆ காலவா ( தேவயானை பிராட்டிக்கு பற்றுக்கோடு ஆனவனே) வாழவே ( நான்) வால ( முருகா) கா ( நீ என்னைக் காப்பாயாக)
4. விநாயகர்
மேலவா வாலவா ( மேன்மையானவனே , தூய்மையானவனே ) வாலவா ( என்றும் பால ரூபமானவனே ) ஆலமே ( ஆலமரம் போல அனைத்துயிர்க்கும் வித்தானவனே )
நாலவா ஆழவா ( ஆழமான நான்மறையின் பொருளே) வாழவா வால நா ( நீ வந்து வாழ்வாயாக மங்கலமாக என்னில் )
நீலவா ( கரிய நிறத்தவனே) வாளவா ( கூர்மையான ஞானத்தின் சொரூபியே) ஆளவா ( என்னை ) வால நீ (என்றும் இளையோய் - சதா பால ரூபா என்று ஆதி சங்கர பகவத் பாதர் போற்றுவார் ஸுப்ரஹ்மண்ய புஜங்கத்தில் )
காலவா ( காலமாகவும் நிற்பவனே) வேழவா ( ஆனை முகனே) வாழவே ( நான்) ஆல கா ( கருணைக் கடலே என்னைக் காப்பாயாக)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக