வியாழன், 18 ஏப்ரல், 2024

இராம நவமி விருத்தம்

தனதன தந்த தனதன தந்த
     தனதன தந்த ...... தனதான

அலைகட லஞ்ச கணைதொடு வெந்தை
    யகிலமு தித்த திருநாளி

லறுசுவை யுண்டி யடையவி ரும்பு
     மனமுள வன்பர்  பலராவா

ரிலைகணி ரம்ப வினியவை யுண்ண
    விதவுரை சிந்தை தனையாள

விரவிய ரன்பு குலதில கன்ற
   னிகரிலி நின்ற கதைகேளாய்

தலையிரு வைந்து நிசிசர னற்றுத்
    தரையினி லம்பு விழயேவி

தனிவிற லங்கை நனிவலி பெற்ற
   சகதல மங்கை துணைவோனை

முலைகடி புள்ளை யொருவிழி கொய்த
   முழுமுத லண்ண லுளமார

வொருமுக மண்ட சிரதுதி செய்து   
    பிறகுரு சிக்க பலனாமே     

பதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய #விருத்தம் 

 சீர் பிரித்து

அலைகடல்  அஞ்ச கணைதொடு எந்தை
    அகிலம்  உதித்த திருநாளில்

அறுசுவை உண்டி அடைய விரும்பும்
     மனமுள அன்பர்  பலராவார்

இலைகள்  நிரம்ப இனியவை உண்ண
    இதவுரை சிந்தை தனை யாள

இரவியர்  அன்பு குல திலகன்றன்
   நிகரிலி நின்ற கதைகேளாய்

தலை இரு  ஐந்து நிசிசரன்  அற்றுத்
    தரையினில்  அம்பு விழ ஏவி

தனிவிறல்  அம் கை நனி வலி பெற்ற
   சகதல மங்கை துணைவோனை

முலை கடி புள்ளை ஒருவிழி கொய்த
   முழுமுதல்  அண்ணல்  உளமார

ஒருமுகம்  அண்ட சிர துதி செய்து   
    பிறகு ருசிக்க பலனாமே     

 

பொருள் :-

அலைகடல்  அஞ்ச கணைதொடு எந்தை அகிலம்  உதித்த திருநாளில் :-  அலைகடலை அஞ்சும் படியாக கணைதொடுக்கவல்ல எந்தை ( இராமர்) அகிலம் உதித்த திருநாளில் ( இராம நவமியில்)

அறுசுவை உண்டி அடைய விரும்பும் மனமுள அன்பர்  பலராவார் :-  அறுசுவை உணவும் அடைய விரும்பும் மனமுள்ள அன்பர் பலராவர்

இலைகள்  நிரம்ப இனியவை உண்ண இதவுரை சிந்தை தனை யாள:- அவ்வுணவுகளை இலைகள் நிரம்பும்படியாகச் செய்து உண்ண சிந்தை தனில் ஆழ்ந்த விருப்பம் இருக்கும் ( என்றாலும்)

இரவியர்  அன்பு குல திலகன்றன் நிகரிலி நின்ற கதைகேளாய் -  அன்பு மிகுந்த சூர்யா குலத்தின் திலகமாக விளங்கும் நிகரில்லாத  இராமனின் இவ்வுலகில் நின்ற  கதையைக்  கேளாய்

தலை இரு  ஐந்து நிசிசரன்  அற்றுத் தரையினில்  அம்பு விழ ஏவி :- அசுரனின் ( இராவணனின்) பத்துத்தலைத்  தரையினில் வீழும் படியாக அம்பு ஏவி

தனிவிறல்  அம் கை நனி வலி பெற்ற சகதல மங்கை துணைவோனை - ஒப்பற்ற ஆற்றல் படைத்த அழகிய கையை உடைய  வலிமை நிறைபெற்ற  பூமி மங்கை ( சீதா பிராட்டியின்) துணைவனான

முலை கடி புள்ளை ஒருவிழி கொய்த முழுமுதல்  அண்ணல்  உளமார :- காகாசுரனின் ஒரு விழியை கொய்த முழுமுதலான (இராமனை) உளமார

ஒருமுகம்  அண்ட சிர துதி செய்து   பிறகு ருசிக்க பலனாமே :- ஒருமுகப்படுத்தி தலைவணங்கிய பின்பே உணவுகளை உண்ண அதன் ருசி மிகுமாம் , பலனும் கிட்டுமென்றவாறு 

 
   
Top 50+ Lord Rama Images | Lord Rama and Sita Photos | Hindu Gallery
 

இருவினை யஞ்ச என்ற திருவருணைத் திருப்புகழின் சந்தத்தைத் தழுவி அமைக்கப் பெற்றது  

இருவினை அஞ்ச திருப்புகழ்



 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாப்பறியா நேரிசை பஃறொடை வெண்பா

யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான்  மூப்பறியா தாக முடிவெடுத்தாற்  காப்பவனே  செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன்  சொந்தமென் றான துணிவ...