சனி, 14 டிசம்பர், 2024

சென்றதினி மீளாது

 

வானவில் பண்பாட்டு மையம் நடத்திய பாரதி திருவிழாவிற்குச் சென்றதினி மீளாது என்ற தலைப்பில் எழுதிய கவிதை 
 
 
காப்பு (வெண்பா)
குன்றிடை வாழுங் குமரனை வள்ளியை
நன்றடைய வித்துவந்த நல்லானை - மன்றடைந்த
நல்லார்கண் மெச்ச நயக்கவி தந்தருளச்
சொல்லாற்பண் செய்வேன் பணிந்து
சென்றதினி மீளாது – நீ
சிந்தனையி லாழாதே
(கலிவிருத்தம்)
1
காலமென்றும் பின்செலாது கண்டதுண்டு நாமெலாம்
ஞாலமெங்கு மீதிருக்க ஞானநூலும் வேண்டுமோ
கோலமென்று நீயிருக்கக் குற்றமில்லை நிகழ்வினிற்
பாலதென்று மீள்வதில்லை மோருறைந்த பின்னரே
(சென்றதினி)
2.
பள்ளிசென்று பைசுமந்து பாடஞ்செய்த பருவமுங்
கள்ளமெளனங் காத்துவந்து காதல்செய்த பருவமு
மள்ளவள்ள காசைவேண்டி யார்ப்பரித்த பருவமுங்
கொள்ளிசெல்லு நாணெருங்கக் கூற்றழிந்து போகுமே
(சென்றதினி)
3
இன்றிருக்க நேற்றையெண்ணி நொந்துபோக லாகுமோ
வென்றடுக்க வேலைசெய்ய வேறுசிந்தை தோன்றுமோ
குன்றிருக்குங் கந்தனெந்தை காதுரைத்த மந்திர
நன்றுரைக்க வின்றுவந்தே னாடிமேன்மை கொண்மினே
(சென்றதினி)
4
இந்தநேர முள்ளவற்றை யேற்றுவந்து வாழ்ந்திடின்
வந்துசேரு மாண்பளிக்கும் வெற்றிமீது வெற்றியே
வெந்துபோகு நன்மைதீமை வித்தளிக்கும் வினைகளும்
பந்தமேது பாசமேது முத்திகிட்ட லாகுமே
(சென்றதினி)
5
ஆற்றடித்துச் செல்லுநீரிற் போனநீர் திரும்புமோ
காற்றடித்து வீசுகந்த வாசந்தா னிலைக்குமோ
சீற்றமிக்குத் தீயுடைத்த செம்மையென்று மன்னுமோ
மாற்றமின்றி வீற்றிருக்கு மாற்றமொன்று தானலோ
(சென்றதினி)
6
வீழ்விலாத வேற்றமில்லை வெற்படுத்துப் பள்ளமே
தாழ்விலாத வேற்றமில்லை தக்கசான்று நோக்கிடின்
வாழ்விலாளு மேற்றமட்டும் வாய்த்திடாது கண்டபி
னோய்விலாதி றந்தவற்றை யெண்ணவேண்டு மாசொலே
(சென்றதினி)
7
பூந்தளிர்க்கு நினைவெதற்குப் புன்னகைத்து வாழவே
வேந்தருக்கு நினைவெதற்கு வெற்றிவாகை சூடவே
மாந்தருக்கு நினைவெதற்கு மாற்றநன்று கொள்ளவே
சேர்ந்திருக்கு நினைவகற்றச் சீர்மைசித்தி யாகுமே
(சென்றதினி)
8
குன்றெடுத்து மாரிகாத்த குட்டன்சொன்ன போதனை
தொன்றுதொட்டு ஞானியர்க டேர்ந்துரைத்த மந்திரஞ்
சென்றவற்றை யெண்ணியெண்ணிச் சீர்குலைந்து மாய்ந்திடா
வின்றுனக்கி யன்றவற்றை யிச்சயற்றுச் செய்வதே
(சென்றதினி)
9
நாமெடுத்து வந்ததென்ன விச்சகத்தில் வாழவே
காமமுற்று நின்றவிச்சை கண்டெடுத்த பயனுமென்
சேமமுற்று நன்றுவாழ சீரளித்த தியற்கையே
மாமிதப்பு வீணெதற்கு மெய்யறிந்து கொள்கவே
(சென்றதினி)
10
சென்றவற்றைச் சேர்ந்திருக்கச் சிந்தைவெந்து நொந்திடா
நின்றவற்றை நன்றிருத்தி நின்மலற்கு நன்றிசொ
லொன்றுமற்ற வாழ்வுபெற்று முண்மகிழ்ந்து சேவைசெ
யன்றுமின்று மென்றுமுள்ள மான்கள்வாழு நாடிதே
(சென்றதினி)
சீர் பிரித்த வடிவம்
காப்பு
குன்று இடை வாழும் குமரனை வள்ளியை
நன்று அடையவித்து உவந்த நல்லானை – மன்று அடைந்த
நல்லார்கண் மெச்ச நயக்கவி தந்து அருளச்
சொல்லால் பண் செய்வேன் பணிந்து
சென்றது இனி மீளாது – நீ
சிந்தனையில் ஆழாதே
1
காலம் என்றும் பின் செ(ல்)லாது கண்டது உண்டு நாம் எ(ல்)லாம்
ஞாலம் எங்கும் ஈது இருக்க ஞான நூலும் வேண்டுமோ
கோலம் என்று நீ இருக்கக் குற்றம் இல்லை நிகழ்வினில்
பால் அது என்றும் மீள்வது இல்லை மோர் உறைந்த பின்னரே
(சென்றது)
2
பள்ளி சென்று பை சுமந்து பாடம் செய்த பருவமும்
கள்ள மெளனம் காத்து வந்து காதல் செய்த பருவமும்
அள்ள அள்ள காசை வேண்டி ஆர்ப்பரித்த பருவமும்
கொள்ளி செல்லும் நாள் நெருங்கக் கூற்று அழிந்து போகுமே
(சென்றது)
3
இன்று இருக்க நேற்றை எண்ணி நொந்து போகல் ஆகுமோ
வென்று அடுக்க வேலை செய்ய வேறு சிந்தை தோன்றுமோ
குன்று இருக்கும் கந்தன் எந்தை காது உரைத்த மந்திரம்
நன்று உரைக்க இன்று வந்தேன் நாடி மேன்மை கொண்மினே
(சென்றது)
4
இந்த நேரம் உள்ளவற்றை ஏற்று உவந்து வாழ்ந்திடின்
வந்து சேரும் மாண்பு அளிக்கும் வெற்றி மீது வெற்றியே
வெந்து போகும் நன்மை தீமை வித்து அளிக்கும் வினைகளும்
பந்தம் ஏது பாசம் ஏது முத்தி கிட்டல் ஆகுமே
(சென்றது)
5
ஆற்று அடித்துச் செல்லும் நீரில் போன நீர் திரும்புமோ
காற்று அடித்து வீசு கந்த வாசம் தான் நிலைக்குமோ
சீற்றம் மிக்குத் தீ உடைத்த செம்மை என்றும் மன்னுமோ
மாற்றம் இன்றி வீற்றிருக்கும் மாற்றம் ஒன்று தான் அ(ல்)லோ
(சென்றது)
6
வீழ்வு இ(ல்)லாத ஏற்றம் இல்லை வெற்பு அடுத்துப் பள்ளமே
தாழ்வு இலாத ஏற்றம் இல்லை தக்க சான்று நோக்கிடின்
வாழ்வில் ஆளும் ஏற்றம் மட்டும் வாய்த்திடாது கண்ட பின்
ஓய்விலாது இறந்தவற்றை எண்ண வேண்டுமா சொ(ல்)லே
(சென்றது)
7
பூந்தளிர்க்கு நினைவு எதற்குப் புன்னகைத்து வாழவே
வேந்தருக்கு நினைவு எதற்கு வெற்றி வாகை சூடவே
மாந்தருக்கு நினைவு எதற்கு மாற்றம் நன்று கொள்ளவே
சேர்ந்து இருக்கும் நினைவு அகற்றச் சீர்மை சித்தி ஆகுமே
(சென்றது)
8
குன்று எடுத்து மாரி காத்த குட்டன் சொன்ன போதனை
தொன்று தொட்டு ஞானியர்கள் தேர்ந்து உரைத்த மந்திரம்
சென்றவற்றை எண்ணி எண்ணிச் சீர் குலைந்து மாய்ந்திடா
இன்று உனக்கு இயன்றவற்றை இச்சை அற்றுச் செய்வதே
(சென்றது)
9
நாம் எடுத்து வந்தது என்ன இச்சகத்தில் வாழவே
காமம் உற்று நின்ற இச்சை கண்டு எடுத்த பயனும் என்
சேமம் உற்று நன்று வாழ சீர் அளித்தது இயற்கையே
மா மிதப்பு வீண் எதற்கு மெய் அறிந்து கொள்கவே
(சென்றது)
10
சென்றவற்றைச் சேர்ந்து இருக்கச் சிந்தை வெந்து நொந்திடா
நின்றவற்றை நன்று இருத்தி நின்மலற்கு நன்றி சொல்
ஒன்றும் அற்ற வாழ்வு பெற்றும் உள் மகிழ்ந்து சேவை செய்
அன்றும் இன்றும் என்றும் உள்ள மான்கள் வாழும் நாடிதே
(சென்றது)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தோட்டை கட்டளைக் கலித்துறை

தோட்டை மதியாக்கித் தொண்டனைக் காப்பாள் துணையிருந்தாற் கூட்டைத் திருவாழுங் கோவிலா யாக்கலாங் கூற்றவனின் ஏட்டை யழித்தாண் டிளமை நிலைக்கும் வழியடை...