அரவணை யறிதுயி றிருவள ருரத்தான்
இரவியின் வழிவர விருகையை மறைத்தான்
மறைபுக ழொருவனே மனிதனென் றிழிந்தான்
இறைதரு மறநெறி முறைதனைப் பணிந்தான்
பணியணி யிறையவ ரணிசிலை யிறுத்தான்
துணையென மிதிலையின் சுடர்விழி யடைந்தான்
அடைந்தநல் லரசரி னரியணை துறந்தான்
சடைமுடி மரவுரி தரித்திடத் துணிந்தான்
துணையவ ளுடன்வர விளையவன் றொடர்ந்தான்
துணிவுடன் றவமுனி துயரினைத் தீர்த்தான்
தீராத் துயர்தருந் தீயரை யழித்துக்
காரார் முகில்வணன் காற்றடம் பதித்தான்
காற்றடம் பதித்த கலையினை வேண்டி
ஏற்றவள் கேட்க விசைந்தான் றேடி
தேடி மாயக் கலையைச் செற்றான்
ஈடி றுணைவியை யிழக்கப் பெற்றான்
பெற்றான் வானரக் கோன்றன் பிரியம்
கொற்றான் வானரக் கோன்றனை மறைந்து
மறைத்த மனைவியை வையக மெங்கும்
சிறைத்த வசுரனின் பிடிவிடத் தேடித்
தேறப் பலவணி வானரச் சேனை
சேறச் சொல்லின் செல்வன் இலங்கும்
இலங்கை செல்ல விராமன் சொல்லக்
கலங்கிய சீதை காட்ட மாய்க்க
மாய வசுரர்கள் மாயத் தாண்டித்
தூயவ னாழிய சோக வனத்தில்
வனப்பி னொப்பின் மாதுக் களித்துச்
சினத்திற் றீவு தீய வெரித்துத்
தீய ரெரியத் திரும்பி யிறையின்
நேய மனங்குளிர நடந்ததைச் சொல்லிச்
சொல்லின் செல்வன் றோளைத் தழுவ
வில்லி னொப்பான் விரைந்து கடலைக்
கடக்கப் பாலங் கடிதே சமைக்கத்
தடக்கை வானரந் தளரா துதவ
உததியைத் தாண்டின வுத்தமன் சேனை
பதறிய வரக்கர் பலரும் வீழ
வீழா வில்லின் விடுத்த கணைகள்
ஏழுல கெரிக்கு மெரியாய் தோற்றத்
தோற்று மடிந்தா னிருபது தோளன்
ஏற்ற வரசனாய் வீடண னிலங்கை
இலங்க வாள இறைவன் பணித்துக்
கலங்க மற்ற கற்பின் றுணைவி
துணைவரத் தூய னயோத்தி யெய்தி
யிணையிலி யரசா யெண்ணிலி யாண்டும்
ஆண்டு குறைதீ ரரியா சனத்தின்
வேண்டும் வரமீ தரவணைத் தானே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக