மூவடி கேட்டு முற்று மளந்தான்
சேவடி விழைவரைச் சேர்வ மியாமே
மூன்றடி யாசித்துப் பின்பு அனைத்தையும் அளந்தானின் செம்மையான அடியை விழைந்திருப்பாரைச் யாம் சேர்வோம்
திருமகள் கேள்வன் சீர்தரு திருவடி
மருவு மன்பர் மகிழ்வ மியாமே
திருமகள் தன் கேள்வனான நாராயணனின் சீர தரும் திருவடியைச் சேரும் அன்பரை யாம் மகிழ்வோம்
பாற்கட றுயிலும் பரமன் சேவடி
யேற்பவ ரெண்ண மிணைவ மியாமே
பாற்கடலின் கண் துயிலும் பரமனது சேவடியை ஏற்பவர்தம் எண்ணத்தின் யாம் இணைவோம்
ஆழியஞ் சங்கமு மாள்பவன் றிருவடி
வாழியென் றேத்துவர் வணங்குவ மியாமே
ஆழியும் அழகிய சங்கும் தனது கைகளில் கொண்டு ஆள்பவனின் திருவடியை வாழி என்று ஏத்துவரை வணங்குவோம் யாம்
கரியினைக் காத்த கரியவன் றூவடி
உரியன வென்போ ருவப்ப மியாமே
ஆனையின் துயரை நீக்கிக் காத்த கரியவனான திருமாலின் தூய அடியைத், தமக்கு உரியாதாக எண்ணி உவப்போரை யாம் உவப்போம்
குன்றினைக் குடையா யெடுத்த கோவலன்
என்று முள்வரை யேத்துவ மியாமே
கோவர்த்தனம் என்னும் குன்றை குடையாக எடுத்து விருந்தாவனத்தைக் காத்த கோவலனான கண்ண பிரானை என்றும் மனத்தகத்தே வைத்து எண்ணுபவரை யாம் ஏத்துவோம்
அரவணை யறிதுயி லாண்டவ னடியவர்ப்
பரவியே பணிபவர்ப் பணிவ மியாமே
ஆதி சேடனின் கண் யோக நித்திரை புரியும் ஆண்டவனான திருமாலின் அடியவரைப் பரவிப் பணிபவரை யாம் பணிவோம்
மதிகதிர் விழியுடை மாசில னடியரைக்
கதியென கொள்பவர் காறொழு வோமே
சந்திரனும் சூரியனும் தனது விழியாகக் கொண்ட குற்றம் நெருங்காத திருமாலின் அடியாரைக் கதி என்று கொள்ளும் அடியாரின் காலை யாம் தொழுவோம்
ஒருவி லொருசொ லுத்தம னடியவர்
பெருமை புகல்வோர்ப் பின்றொடர் வோமே
ஒரு வில்லும் ஒரு சொல்லும் கொண்ட உத்தமனான இராமன் தன் அடியவர்தம் பெருமையை உரைப்பவரை யாம் பின் தொடர்வோம்
பாராண் மீட்ட பன்றியி னன்பர்த்
தீர்வா யடைவர் சீருரைப் போமே
பாராளாகிய பூமி பிராட்டியை மீட்டெடுத்த வராக அவதாரமெடுத்த திருமாலின் அன்பரைத் தீர்வு என அடைபவரின் சீரை யாம் உரைப்போம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக