மானுட முண்டோ மாந்தர்க் கவர்த
மூனுடம் பொன்றே யுயர்வாய்க் கொள்வர்
பசித்தா லன்றிப் பாய்ந்து கொல்லற்
கறிவைந் துடையன பிறவுயிர் நாடா
வாறா மறிவைத் தேறா வறிவாய்த்
தன்னல மொன்றே யெண்ணத் தாஅண்
டின்னல் செய்து மண்ணுயு ரழிக்கு
மாந்தர்க் கையோ மானுடங் குறையே
மானுடம் உண்டோ மாந்தர்க்கு ? - இல்லை என்பதாம்
அவர்தம் ஊன் உடம்பு ஒன்றே உயர்வாய் கொள்வர்- தனது உடலொன்றே கருத்தில் கொண்டு பிறவற்றைக் கணக்கில் கொளார்
அறிவு ஐந்து உடையன - ஐந்தறிவு உள்ள விலங்குகள் முதலியன
பசித்தால் அன்றி பாய்ந்து கொல்லற்கு பிற உயிர் நாடா - பசி இருக்கும் பட்சத்தில் மட்டுமே இரையைப் பாய்ந்து கொல்லும் செயலைச் செய்யும்
ஆறாம் அறிவை தேறா அறிவாய் - தமக்கு அருளப் பட்ட ஆறாம் அறிவாகிய மனனை, சற்றும் அதன் இயல்புக்கேற்பப் பயன் படுத்தாது, ஆராய்தல் என்பது இல்லாத படி
தன்னலம் ஒன்றே எண்ணத்து ஆண்டு- சுய நலம் ஒன்றே குறிக்கோளாய்த் தமது எண்ணத்தை ஆண்டு
இன்னல் செய்து மண் உயிர் அழிக்கும் மாந்தர்க்கு - தீமைகள் செய்து மண்ணில் உள்ள பிற உயிர்களை அழிக்கும் மாந்தர் இனத்திற்கு
ஐயோ மானுடம் குறையே - மானுடம் என்பது குறைவே தான் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக