திங்கள், 11 மே, 2026

காதன் மலர்ந்தது எழு சீர் மண்டிலம்

காதன் மலர்ந்தது கனிந்தன காண்பவை 

     காழ்ப்பெனுங் கருத்திலை நெஞ்சினிலே 

மோதன் மறந்தது மூள்பகை மறைந்தது 

     முகிழ்நகை வளர்ந்தது வாழ்வினிலே 

ஈதல் வளர்ந்துபின் இகழ்புகழ் ஒன்றின 

     இறையொளி நிலைத்தது மனவானில் 

சாதல் ஒழிந்தது தான்றன தழிந்தன 

     தனிப்பெருங் கருணையின் வடிவமைவே


காதல் மலர்ந்தது - அன்பு என்னும் கருத்து மலர்ந்தது அதன் பின்னர் 

காண்பவை கனிந்தன- காண்பவை யாவும் மென்மையாய்த் தோன்றின 

நெஞ்சினிலே காழ்ப்பு என்னும் கருத்து இல்லை - நெஞ்சத்தில் வெறுப்போ கசப்போ அறவே இல்லை 

மோதல் மறந்தது - மோதல் என்னும் பண்பு மறந்தே போயிற்று

மூள் பகை மறைந்தது - மூளும் உட்பகையும் புறப்பகையும் மறைந்து போயின 

வாழ்வினிலே முகிழ் நகை வளர்ந்தது - வாழ்வில் புன்சிரிப்பு மலர்ந்து பின்பு வளர்ந்தது 

ஈதல் வளர்ந்து - ஈகை என்னும் குணம் வளர்ந்தது 

பின் இகழ் புகழ் ஒன்றின- அதன் பின்னர் இகழும் புகழும் ஒருமனதாகக் காணப் பெற்றன 

மன வானில் இறை ஒளி நிலைத்தது - மனம் ஆகிய வானத்தில் இறையின் ஒளி நிலைத்து நின்றது 

சாதல் ஒழிந்தது - இறப்பு என்னும் கருத்து ஒழிந்தது 

தான் தனது அழிந்தன - தான், தனது (அகங்காரம்/மமகாரம்) என்ற கருத்து அழிந்தன 

தனி பெரும் கருணையின் வடிவு அமைவே - தனிப் பெருங் கருணை குணம் கொண்ட இறையின் வடிவமைவு இதுவே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மன்னன் வருவான் மணவாளன் அறு சீர் மண்டிலம் முற்றுமோனை

தனது தலைவனான முருகனைப் பிரிந்த தலைவியின் கூற்று   மன்னன் வருவான் மணவாளன்        மாலை மார்பன் வடிவேலன்  தென்னன் றிருவாஞ் செந்தமிழின்         ...