நேர முழுதும் பணியி னழுந்து
நிலைவந் தாளும் வேளை
பார மென்று விலக்கி வைத்துப்
பாரி னழகைக் கொள்ள
யாரும் விரும்பு மோய்வை நாட
விங்கார்க் கமையும் வாய்ப்புத்
தீராப் பிணியைத் திருத்தி யமைக்கச்
சிதறா துறைவாய் திருவே
நேரம் முழுதும் பணியின் அழுந்தும் நிலை வந்து ஆளும் வேளை - அனைத்து நேரமும் பணியிலே அழுந்திக் கிடக்கும் நிலை வந்து நம்மை ஆளுகின்ற வேளையில்
பாரம் என்று விலக்கி வைத்து - அப்பணி சுமை என்று கருதி அதனை விலக்கி வைத்து
பாரின் அழகை கொள்ள - பாரின் கண் வீற்றிருக்கும் எண்ணற்ற அழகை அனுபவிக்க
யாரும் விரும்பும் ஓய்வை நாட - அனைவரும் விரும்பும் ஓய்வை (பணிச்சுமையினிருந்து) நாட
யாருக்கு இங்கு அமையும் வாய்ப்பு - யாருக்கு இந்த வாய்ப்பு இங்கு அமையும்
தீரா பிணியை திருத்தி அமைக்க - இப்பணியின் கண்ணே விடுதலையின்றி அழுந்திக் கிடக்கும் தீராத பிணியைத் திருத்த
திருவே சிதறாது உறைவாய் - செல்வமே எம்மிடத்தில் சிதறாது உறைவாயாக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக