பிறந்தான் பிறப்பிலான் பிறழுயிர் படுசுழற்
பிணியறுத் தணைக்க மிகுத்தவன்பாற்
றுறந்தான் கயிலைவாழ் நித்திய மாண்டியாய்ச்
சுடரொளி வீசுநல் லாறானான்
மறந்தான் பத்தர்தங் குறைச்செய லருடர
மலையெலாந் தனதென வாட்கொண்டு
நிறைந்தான் வேறொடு காவலன் மனத்தொரு
நிலைநிறுத் தன்பர்த நினைவினிலே
பிறழ் உயிர் படு சுழல் பிணி அறுத்து அணைக்க மிகுத்த அன்பால் பிறப்பு இல்லான் பிறந்தான் - பிறப்பிறப்பற்ற இறைவன் பிறழ் உயிர்கள் படும் சுழல் பிணியை அறுத்து அவைகளை அணைக்கப் பிறப்பெடுத்தான்;
கயிலை வாழ் நித்தியம் துறந்தான்-கயிலை மலையின் நிலைத்த வாழ்வைத் துறந்து பழநியம்பதி அடைந்தான்;
ஆண்டியாய் சுடர் ஒளி வீசு நல் ஆறானான் - ஆண்டிக்கோலம் பூண்டு அன்பர்களுக்குச் சுடரொளி வீசும் நல்ல வழியாய்த் திகழ்ந்தான்;
மலை எல்லாம் தனது என ஆட்கொண்டு - குன்றெல்லாம் தன்னிடமாக்கி ஆண்டு;
அருள் தர பத்தர் தம் குறை செயல் மறந்தான் - தனது எல்லையற்ற அருளை நல்கப் பத்தர்கள் குற்றச் செயல்களை மறந்தான்(பொறுத்தான்);
மனது ஒருநிலை நிறுத்து அன்பர்தம் நினைவினில் வேல் தொடு காவலன் நிறைந்தான் - தன்னகத்தை ஒரு நிலை படுத்தவல்ல அன்பர் தம் நினைவில் வேலை ஏவும் காவலனான முருகன் நிறைந்தான்;
ஏகாரம் ஈற்றசை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக