திருவினைக ணீங்கி யொருவழியாய் வாழ்விற்
றெளிவுறவே பாதை காண
வருமுயல்வை நாடி யனைத்துலகந் தேடி யாவதொன்று மில்லை காணீர்
திருவுடைய மார்பன் றிகழொளிசே ராழிச்
செருத்தொடங்கு சங்கத் தலைவன்
றிருவடியைச் சேருந் திருநமக்குக் கிட்டத்
திருவுளமுங் கொள்வா னவனே
திருவினைகள் நீங்கி- நம்முடன் என்றுமே வரும் இருவினைகள் ஆகிய திருவினைகள் நீங்கி
ஒரு வழியாய் வாழ்வில் தெளிவுறவே பாதை காண - ஒரு வழியாக தெளிவு பெற பாதை ஒன்றைக் காண
அருமுயல்வை நாடி- அருமையான முயற்சியை நாடி
அனைத்து உலகும் தேடி - எங்கெங்கும் சென்று தேடி
ஆவது ஒன்றும் இல்லை காணீர் - ஆவது ஒன்றுமே இல்லை என்று காண்பீர்
திரு உடைய மார்பன் - திருமகளை தன் மார்பில் வைத்துள்ளவனுமான
திகழ் ஒளி சேர் ஆழி - ஒளி திகழும் ஆழியைத் தன் கையில் ஏந்தியவனுமான
செரு தொடங்கும் சங்க தலைவன் - போரைத் தொடங்கி வைக்கும் பாஞ்சசனியம் என்னும் சங்கத்தை தனது மற்றொரு கரத்தில் ஏந்திய தலைவனுமான திருமாலின்
திருவடியை சேரும் - திருவடிகளை சேரும் வைகுந்த முத்தி என்னும் உயர்வுக்கெல்லாம் உயர்ந்த நிலையை அடைவதற்கும் கூட
திரு நமக்கு கிட்ட - அப்பெருஞ் செல்வம் நமக்கு கிட்டுவதற்கும் கூட
திரு உள்ளமும் கொள்வான் அவனே - அவனது திருவுள்ளம் இருந்தால் மட்டுமே நிகழும்
நம் முயற்சியால் ஆவதொன்றும் இல்லை, யாவும் அவன் கருணையே என்பது கருத்து
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக