கோது ( சக்கை இங்கு உடலுக்கு உவமை) கோதில் -சக்கை யின் இருப்பிடிமான இவ்வுடல் , அது இளமை , முதுமை எனும் இயல்பில் அதன் போக்கில் அதற்கு உரித்த குணங்களில் உழல்கிறது, அவ்வுடலின் உரிமையாளனான உயிர் ( கோதில் கிழவ ) குமரன் எனும் கடவுளை உணராமல் குழம்பி நிற்கிறது.
கோது ( சக்கை இங்கு உடலுக்கு உவமை) கோதில் -சக்கை யின் இருப்பிடிமான இவ்வுடல் , அது இளமை , முதுமை எனும் இயல்பில் அதன் போக்கில் அதற்கு உரித்த குணங்களில் உழல்கிறது, அவ்வுடலின் உரிமையாளனான உயிர் ( கோதில் கிழவ ) குமரன் எனும் கடவுளை உணராமல் குழம்பி நிற்கிறது.
அச்சக்கையான உடலுக்கு மரணம் (இழவு) போல திகழும் அரவு ( குண்டலினி) எழும்ப , புத்துயிர்ப் பெற்று ஞானம் பிறக்கும் , பின்பு இவ்வுலகமே குற்றமற்றக் கடவுளின் ( கோதில் கிழவா குமரா) உருவமாய்த் தெரியும்
17.
வேலனே வேதமாய் ஞாலமும் போற்றிடும் மேன்மையுரை
காலனை வீழ்த்திடும் கந்தனைக் காட்டும் கவிமணியைப்
பாலமாய்க் கட்டியே பாதையைச் செய்தநற் பாரதனிற்
சீலனைப் போற்றியே சேயுரு செப்பு திருப்புகழே
18.
அருணைக்கு மேலு மழகூட்டும் வண்ண மவதரித்த
கருணைக் கடலைக் கவிக்கொரு வித்தைக் கலைமணியை
வருணிக்கச் சொல்லு முளதோ எனினு மனமகிழ்ந்தித்
தருணத்திற் செந்தமிழ்ச் சொன்மாலை சாத்துவோ நாதருக்கே
19.
நினைத்தாலே முத்தி தருமூ ருதித்தோன் றிருப்புகழை
நினைத்தாலே முத்தி நினைவி னிறுத்தி குருப்புகழை
நினைத்தாலே முத்தி நிசமறிந் தோத நிலையுயர்ந்து
நினைத்தாலே முத்தி தருநாத னாசி நிலைபெறுமே
20.
யானென் றழிந்துய் யவுனதாட் பற்றி யினம்புரியா
தேனென் றருந்தி திளைத்த சுரரேவு தென்னிலங்கை
மானன் றடைய வனம்விரைந் தோடி மனைதொலைத்த
கோனென் றுமெச்சுங் குமரா குறைவிற் குருகுகனே
21.
எண்ணற் றுயிர்கட் குளத்துறை நாதா உலகளந்து
மண்ணற்று நின்றகோ மாவலி ஆட்கொண்டு மண்கலசம்
கண்ணுற் றுடைத்துக் களவாடி வெண்ணெய் கதியறியா
புண்ணுற் றுனது புகழ்பாடும் அன்பர் புகலிடமே
22.
கீதையி னாயகன் கேட்டுத் தெளிய, கறையறியாச்
சீதையி னாயகன் சான்றாய் விளங்க, தினந்தொழவே
கோதையி னாயகன் கூடத் தரசனெங் கோதகற்றிப்
பாதையைப் பாரிற் பரிசுத்த மாக்க, பதைப்பிலையே
23.
சரண முனதடிக் கீழென்றும் மாய தரணிதனில்
மரண மெனைய ணுகுநே ரமதில் மயில்மிசைவந்
தரணு மெனக்க ருளியு னதுல கழைத்தெனையும்
தருண மதிற்கதி தாவம ராபுரி வாழரச
24.
வாடாத் தமிழ்மாலை வையஞ் சுவைக்க வடித்தவளை
கூடாரை வெல்லும்சீர் கோவிந் தனுவக்க கோதைதனைச்
சூடிக் கொடுத்த சுடர்கொடி யைநாம் துதிப்போம்திரு
வாடிப்பூ ரந்தனில் ஆள உதித்த பிராட்டியையே
25.
தளைபட் டழிய தனியே தவிக்குந் தரணிதனில்
விளைபற் றறுத்து வினைகள் புரியும் வினயமளி
ஒளியிட் டொழிப்பா யுளத்த(ல்)லை யென்றுங் குகனினைவை
முளைவிட் டெழச்செய் முகமா றுடைய முழுமுதலே
26.
மாலை யகற்றி மனத்தூய்மை பெற்றிட வையமதின்
மாலை யகற்றி னமேற்றி வழிபடு மாண்பருட்கா
மாலை யகற்றி வடிவனை யென்றும் வணங்குருகு
மாலை யகற்றி யமனு மியலா வணமருளே
மாலை அகற்றி மனத்தூய்மை பெற்றிட வையமதில் மாலை அகல் தினம் ஏற்றி வழிபடும் மாண்பு அருள் காமாலை அகற்றி வடிவனை என்றும் வணங்கு உருகும் மாலை அகற்று இயமனும் இயலா வ(ண்)ணம் அருளே
வையமதில் உள்ள மாலை ( மயக்கத்தை) அகற்றி மனத்தூய்மை பெற்றிட , மாலை அகல் தினம் ஏற்றி வழிபடும் மாண்பருள், காமாலை அகற்றி வடிவனை என்றும் வணங்கு உருகும் மாலை ( அன்பை) அகற்ற இயமனும் இயலா ( இறப்பு கூட அந்த அன்பை விலக்கிடா) வண்ணம் எமக்கு அருள்வாயாக
27.
ஆடி அடங்கும் அவனி அவதரித் தார்ப்பரிக்கும்
தேடித் திரிந்தும் தளையறா வாழ்வில் திசையறியா
வாடி வதங்கும் உயிர்கள் உயர மனமுருகி
ஆடி அதனில் அனையைத் தொழுதிடும் வெள்ளியிலே
28.
அடைந்த துனத ருளாலே அனைத்தும் அகமகிழ
உடைந்த தெனது ழலும்பி றவிபல உன்னடியார்
நடந்த வழிய தனைத்தொ டரநாளும் ஞாலமதைக்
கடந்த சுடரே கருத்தே உறைகந்த கோட்டகோவே
29.
முத்தா யடியெடுத் தூட்டி யமுத ருணகிரிக்குப்
பித்துந் தெளிய பிரானைத் துதிக்கும் பிறங்குமதி
வித்தென உள்ளே இருந்தீ தனைவீடோ ராறுடைய
எத்தனை சென்மம் எடுப்பின் உடன்வா இறைவநீயே
30.
முக்கா லறிந்த முழுமுதற் கோவை யுளமுருகி
இக்கோலங் காண இளமதி யைப்பூணும் ஈசனடி
எக்காலு மாடும் விடைபாகன் லீலை விரும்பிபெற
நெக்காடு நாகம் நகைபூணு நாதா நிதமருளே
31.
மையங்கண் மாதர்தம் மார்பினிற் சேர விழைபவனின்
வையொளிச் செங்கதிர் வண்ண முகமா றழகுடைய
கையயிற் றன்னெழிற் கண்கவர்க் கோலமாய்க் காட்சிதரும்
தையலா ரீருடை தன்றமி ழேற்குந் தனிப்பொருளே
32.
சங்கத் தமிழ்மூன் றளித்தான் வினாயக னௌவைக்கன்று
மங்கை ஒருபங்கன் மூலன் தமிழ்செ யளியளித்தான்
பங்கயக் கண்ணனோ பாத்தமிழ்க் கேட்டுடன் பின்தொடர்வான்
செங்கையில் வேலன் சிரித்தேற்பான் வைதார் தமிழ்பிடித்தே
33.
அடைந்த துனத ருளாலே அனைத்தும் அகமகிழ
உடைந்த தெனது ழலும்பி றவிபல உன்னடியார்
நடந்த வழிய தனைத்தொ டரநாளும் ஞாலமதைக்
கடந்த சுடரே கருத்தே உறைகந்த கோட்டகோவே
34.
பித்தன் பிறப்பித்த பேற றுமுகப் பிரானுனையே
சத்தி சிறப்பித்தாள் சண்முக மொன்றாய்த் தகைமைபெற
குத்தி அவுணர் குலகுன் றழித்தாய் கணத்தினிலே
அத்திக் கிறைவா வணங்குவோ மாடி கிருத்திகையே
35.
பித்த னெனவும் பிரானைத் தொழலாம் பிரியமுடன்
அத்த னெனவு மடிமை செயலா மகமழிந்தே
சித்த னெனவுஞ் சிவனைத் தொழலாம் சிரம்பணிந்தே
பத்த னுளம்பண் படைய விசைப்பான் படைத்தவனே
36.
காரோட்ட வாழ்வில் கலங்கா துனது கழல்பெறவே
சீராட்டு மன்னை திருவாய் முகிழ்ந்து திகைக்கவைத்த
பாராட்டு மேசு பகைச்சொல்லு வேறிலாப் பார்த்தனுக்குத்
தேரோட்டு மீசை தயிர்வண்ண கோவெமைத் தேர்ந்தருளே