காப்பு :-
முகமா றுடையான் நுதற்கண் புதல்வன் முருகுருவ முகமா றுடையான் மொழியான் மொழிய உளத்தமர்ந்து முகமா றுடையான் முதற்கண் தொழுது வினையகற்றி முகமா றுடையான் மருகன் புகழை உரமளியே
முகம் ஆறு உடையான் - முருகன், முகத்தில் ஆறு உடைய சிவபெருமான் , முகம் ஆற்றின் கண் வைத்த மஹாவிஷ்ணு (திருவரங்கநாதர்) முகம் மாறு உடையான் - விநாயகர்
1.
பிரம முறையாப் பொருளு முளதோ படைப்பிலென பிரம முறையாப் பிறங்கித் தெளியப் பிணியறுக்கும் பிரம முறையா றுமுகப் பரமன் பிடித்துறையும் பிரம முறையா யனுதின மேத்தும் பரங்கிரியே
2.
பரம பதம்பயின் றேத்த பரம னருட்புரிய பரம பதம்நவின் றேத்த பரம னருட்புகழைப் பரம பதம்வியந் தேத்து முனிவன் பகர்ந்ததிரு பரம பதமான செந்திற் புகழைப் பணிகுவனே
பரம பதம் - சிறந்த சொல் , பரமனின் பாதம் , வீடு பேறு , செந்திலம்பதி இவ்வுலகில் பரமபதம் முனிவன்- அருணகிரிநாதர்
3.
பணியா றுதலைப் புனைந்த பெருமான் பழம்பெறவிப்
பணியா றுதலைப் புதல்வன் புவிவலம் பாழ்பிதாமா
பணியா றுதலைப் புதல்வன் பழம்பெற பாலதண்டன்
பணியா றுதலைப் பயிலப் பழனிசெற் பார்வதியே
பணி ஆறு தலை புனைந்த பெருமான் பழம் பெற
இப்பணி ஆறுதலை புதல்வன் புவி வலம் பாழ்
பிதா மா பணி தலைப் புதல்வன் பழம் பெற பாலதண்டன்
பணி ஆறுதலை பயில பழனி செல் பார்வதியே
பாம்பும் ஆறும் தலையில் புனைந்த சிவபெருமான் வைத்த போட்டியில் பழம் பெற ஆறுதலை உடைய புதல்வனான முருகப் பெருமான் புவி வலம் வந்தார், அது வீணாய் போனதாக எண்ணினார் ஏனென்றால்
பிதா மாதா வைச்சுற்றி ( பிதா மாதா பணியும் ஆறு - வழியாக) அப்பழத்தை சிவபார்வதியின் தலைப்புதல்வனான விநாயகர் பெற்றார் , அதனால் சினம்கொண்ட முருகர் பாலதண்டாயுத பாணியாக பழனி சென்றார் , அவர்க்கு ஆறுதல் புரியும் பணி செய்ய ( திரும்ப அழைக்கப் பார்வதி தேவி பழனி சென்றார்
4.
பார்வை யளக்கும் பரமன் புதல்வன் பணியாததாற் பார்வை யளித்து பரமன் புதல்வன் பிணையமர்த்த பார்வை யெரித்த பரமன் புதல்வன் மடியமர்ந்து பார்வை உரைத்த பரமன் புதல்வனா வேரகனே
பார் வை ( பருமையான உலகம்) அளக்கும் பரமன் ( திருவிக்ரமன்) புதல்வன் ( விஷ்ணுவின் சேயான பிரமதேவன்) பணியாததால் பார்வை ( சோதனை) அளித்து ( பிரமனுக்கு) பரமன் புதல்வன் ( சிவபெருமானின் குமாரனான முருகா நீ) பிணையமர்த்த ( சிறைபிடித்தாய் பிரமனை)
பார்வை எரித்த பரமன் புதல்வன் ( காமன் விஷ்ணுவின் புதல்வன் ) அவனை பார்வையால் எரித்த சிவபெருமானின் மடியமர்ந்து
பார்வை உரைத்த பரமன் ( மந்திரம் ஏதும் சொல்லாமல் வெறும் பார்வையால் - மௌனத்தால் குருவாக விளங்கும் தக்ஷிணாமூர்த்தி ) புதல்வனா ( அவரே உனக்கு சீடராய் அமர்ந்தாரே - என்ன வியப்பு ) திருவேரகனே ( சுவாமி மலைப் பெருமாளே)
5.
வேட வுரிதரி மின்னேர் விடையான் விசயற்கன வேட வுரிதரி மின்னேர் வினைவாழ் வுழலுமாக்கு வேட வுரிதரி மின்னேர் திருத்தணி வெற்புறையும் வேட வுரிதரி மின்னேர் கொடிபுணர் வேலவனே
வேட உரி தரி ( வேடனைப் போல ஆடைகள் அணிந்து கொண்டு ) மின்னலைப் போல வெண்மையான அழகான விடையை உடையவனான சிவ பெருமான் அர்ஜுனற்கு அருள் செய்தது போல வேடமாக இவ்வுரியை தரித்த மின்னலைப் போல நிலையற்ற வினையால் சூழப் பட்ட வாழ்வில் உழலும் ஆக்கு
( உயிர் இந்த உடலை அணிவது மற்றும் நிலையற்ற வாழ்வில் நிலையென்று நம்பி உழல்வது ) வேட உரிது அரி ( இவ்வேடத்தை நீக்கி - உண்மையை விளக்கு) மின்னேர் ( ஒளியும் அழகும் பொருந்திய) திருத்தணி மலையில் உறையும் வேடன் போல வந்து மின்னேர் கொடி ( வள்ளியை அம்மையை) அடைந்த வேலவனே
6.
வேலாச்சி வைய விளையன் வருடைகண் மேய்த்தருளும் வேலாச்சி வைய றிவின்மீ தகந்தையை விட்டொழிய வேலாட்சி வைய ருணிறை புதல்வன் விளையாடினன் வேலாட்சி வைய மருளும் பழமுதிர்ச் சோலையனே
வேலாச்சி - வேலைப் போல ஞானமுடைய பாட்டி ( ஒளவை) வைதாள் ( செல்லமாக எனக் கொள்க) இளம் ஆடு மேய்க்கும் சிறுவனை ( சுட்ட பழம் திருவிளையாடல்) அவ் வேலாச்சியின் வை ( கூர்மையான) அறிவின் மீது உள்ள அகந்தையை அகற்ற வேலாள் ( என்றும் வெற்றியுடைய) சிவை ( அன்னை பராசக்தி) அருள் நிறைந்த புதல்வன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக