கரிமுனி பகரக் கரிமுக னெழுதக்
கடலொலி யெழுப்புங் கலைநதியு
மிருநில முலர விபமுகன் குளிரப்
பெருநிலத் தடியின் மறைந்தோடப்
பெருவரை யதிரப் பெருமைக ளுணரப்
பிறங்கொளி பரவுங் கதிராகக்
குருவரு ளணுகத் திருவரு ணுழையக்
கருமமு முணர வறவாழ்விற்
குருகுல மழியக் குணவதி மகிழச்
செருவிடை யுரையைப் பரந்தாம
னரகுல முயர நடவழி யுணர
நமதிடை புலரப் பணியானே
வரிவடி வுலகு வகைவகை யுளவும்
வடிவழ குடனே வடித்தானே
திருவடி யுறையச் செறுகலி யொழியத்
தினமுறை தொழுவோ மறைநூலே
கலை நதி - சரஸ்வதி
கரிமுனி - வியாசர்
பெருவரை - மேரு
குருகுலம் - கவுரவர்கள் குலம்
கரிமுகன் , இபமுகன்- விநாயகர்
வியாசர் பகர விநாயகர் எழுதக் கடலைப் போன்ற பேரரவம் எழுப்பிய சரஸ்வதி நதியானவள் விநாயகரை வியாசர் என்ன சொல்கின்றார் என்று கேட்பதைக் கடினப் படுத்தினாள் , ஆதலால் அவள் நிலத்தினுள் ஓடும்படியாக பணிக்கப் பட்டனள் , அதன்பின் மகாபாரத உரை தொடர்ந்தது, இந்நிகழ்வு நடந்தது பெருமைமிகு மேரு மலையில் , அம்மலை அதிரும்படியாகவும் கருத்தாழந்த பாரத உரை தொடர்ந்தது , அனைத்தையும் விளங்கச் செய்யும் கதிரவனின் ஒளியைப் போல அப்பாரதப் பெருமையாம் . குருவருள் அணுகி அதனூடாகத் திருவருள் பெறுவதும் கருமம் அறம் வாழ்வில் என்னவென்றுணரவும் நூற்றொருவர் குலமழியக் குணவதியான பாஞ்சாலி மனமகிழவும் செய்த போரின் இடையே சம்பவித்த கீதையின் வழியாக உரைத்தான் பரந்தாமன். அவ்வுரை மானுடர்கள் உயரவும் அவர்கள் நல்வழியில் எவ்வாறு நடக்கவேண்டும் என்பது புலரும்படியாகவும் அமைய அவனே பணித்தனன். இப்பேற்பட்ட பெருமைக்குரிய பாரதத்தை வரிவடிவமாக வுலகிற்குத் தந்ததனைப் பல வகைகளாகப் (இடஞ்சார்ந்த வழக்குக் கதைகளாகப்) பரவும்படியும் வடித்தான் விநாயகன் ( அல்லது பரந்தாமன் அந்தர்யாமியாக வமர்ந்து செய்ய வைத்தனன் எனவும் கொள்ளல் தகும் ) ஆதலால் செறு கலியின் தீங்கை விட்டொழிக்கவும் , இறைவன் திருவடியை அடையவும் இம்மறைநூலை உபாயமாகக் கொண்டு நாந் தொழு தோதுவோமாக
'இருவினை யஞ்ச' என்னும் திருப்புகழின் சந்தத்தினைத் தழுவி விரித்த திவ்விருத்தம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக