தீயிலே வெம்மையாய் நீரிலே தண்மையாய்
மேவிடும் வெளியதாய் மண்பயி றிண்மையாய்
வீசிடும் வளியுளாய் வாசமுள் வாசமாய்
பேசவு மியலுமோ வரம்பிலான் றன்மையை
நீசனை யாண்டனை நேமியாய்
வாசனை யுள்ளதோ வந்தனை வாழ்விலே
சீர் பிரித்து
தீயிலே வெம்மையாய் நீரிலே தண்மையாய்
மேவிடும் வெளியதாய் மண்பயில் திண்மையாய்
வீசிடும் வளி உளாய் வாசமுள் வாசமாய்
பேசவும் இயலுமோ வரம்பு இலான் தன்மையை
நீசனை ஆண்டனை நேமியாய்
வாசனை உள்ளதோ வந்தனை வாழ்விலே
பொருள் :-
தீயின் வெம்மையாய் நீரின் தண்மையாய் எங்கும் பரந்து இருக்கும் ஆகாசமாய் , மண்ணாகிய பூதத்தின் திண்மை எனும் தன்மையுமாய் வீசிடும் காற்றின் வாசத்தின் உள்ளிருக்கும் வாசமாய் (தன்மையாய்) விளங்குகிறாய் , ஐம்பூதங்களாகவும் அதன் தன்மைகளாகவும் நீயே விரிந்தனை , உன்னை மொழியினால் விவரிக்கத் தான் இயலுமோ , நீ தான் எல்லையற்றவன் ஆயிற்றே!
எனினும் நீசனாகிய என்னை வந்து ஆண்டனை . இது உன் பெருங்கருணை , இத்தன்மையைக் கண்டு வியக்கும் போதே எனது சிந்தனை சொல்கிறது ஒரு வேளை முன் பிறப்பின் வாசனை உள்ளதோ உன்னைத் தொழுது எனக்கு அதனால் தான் நீ வந்து என்னை ஆட்கொண்டாயோ என்று , (இதுவும் என் அகந்தை அன்றோ !) இதுவும் இச்சிறியேனின் அறியாமை , நீயாக வந்து ஆட்கொள்ள நினைக்கா விடில் அது நடக்குமா என்ன ! யாவுமாக உள்ளவன் நீயன்றோ நேமியாய் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக